Sep 28, 2007

தெனாலிராமன் - 7

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.


இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.


அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.


அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.


இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.


அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.


இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.


இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.


"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.


ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.


அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா............... பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.


இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.


"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.


இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.


எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

Sep 12, 2007

தெனாலிராமன் - 6

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.
குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.

தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.
ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.
அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.

தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று.
உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள்.

இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர்.
மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.

தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.

காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.

காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.

Sep 11, 2007

தெனாலிராமன் - 5

அரசவை விகடகவியாக்குதல்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.


மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.


தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.


இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.


சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.
தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.


அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.
அதை சோரிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.


அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டடை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

Sep 7, 2007

தெனாலிராமன் - 4

ராஜகுருவைச் சந்தித்தல்


பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.


தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.


ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.


உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.


வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.