Apr 13, 2008

தமிழ்க்கடல்!

மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பலசொற்கள்(பெயர்கள்) மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக்கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..


கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை
சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பலசொற்கள் இருக்கின்றன.ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைபப்ற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர்பெற்றது.

மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி ,ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. .பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.

கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.

கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கொள்=எடுத்துக்கொள்ளுதல்) கார்+கோள்=கார்கோள் ஆகி இருக்கலாம்.(இது
சரியா இல்லையா என்பது முழுமையாய் விளங்கவில்லை)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும்
சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமிஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரியநிதியைப்போல இருப்பதால் அதற்கு சலநிதி(சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரிவாரித்தருவதால் வாரி, வாரிதி.

கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப்பெயர் சலதி.
கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும்கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள்தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக்குறிப்பிட பல சொற்கள் இருப்பதுபோலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும்.
நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இருபக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச்சொல்லை ஆங்கிலேயர்கள்கடன் வாங்கி கட்டமாரான் (catamaran)என்கிறார்கள்!

மரத்தைகுடந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.
ஓடுவதுபோல விரைந்து செல்வது ஓடம் .மீன்பிடிக்க பயன்படும்மரக்கலம் திமில்.
பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்
..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம்,

காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப்பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல்.

submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது.

Feb 28, 2008

தெனாலி ராமன் கதைகள்- நகரும் படம்-1

Jan 24, 2008

அறிவுடைமை, குறள்: 423

காட்சி : 1 இடம் : காலேஜ் லைப்ரரி
ஜன்னலோர இருக்கையில் முழுநிலவு! உட்கார்ந்திருக்கிறாள் அவள். எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டிருக்கிறாள். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் தோழி, அவளை நோக்கி ஓடி வருகிறாள்!

“போச்சு.. எல்லாமே போச்சுடி!”

“ஏய் லூசு. என்னாச்சுடி உனக்கு? என்ன உளர்றே?”

“யாரு நானா லூசு! அவனை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பொண்ணு. உன்னோட ஆசைக்காதலன் இருக்கானே அவன் உனக்கு மட்டும் காதலன் இல்லே. இன்னொருத்தியையும் லவ் பண்றான்டி”

“என்ன சொல்றே?”

“அவன் உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன்”

கோபத்தில் நிலாப்பெண்ணின் முகம் ரத்தச் சிவப்பாகிறது!

“எவ அவ?”

“தெரியல, ஈவினிங் காலேஜ் பொண்ணுன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”

“எங்கே?”

“ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல. பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”

குபுகுபு கோபத்துடன், கூடவே வழியும் கண்ணீருடனும் எழுகிறாள் நிலா..

“எப்பப் பார்த்தே நீ?”

“ஜஸ்ட் நௌ.. இப்பத்தான். மறுபடியும் ஈவினிங் மீட் பண்ணலாம்னு சொல்லிக்கிட்டே பிரிஞ்சு போனாங்க. இன்னிக்கு ஈவினிங்கே நீ அங்கே போனாலும் அந்தக் கூத்தைப் பார்க்கலாம்”

ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் நிலாப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது.

காட்சி : 2 இடம் : காலெஜுக்கு எதிரே இருக்கும் இண்டர்நெட் ப்ரௌசிங் சென்டர்
மும்முரமாக வலையில் மூழ்கிப் போயிருந்தான் அவன், நிலாப் பெண்ணின் காதலன். வியர்க்க விறுவிறுக்க லைப்ரரிக்கும் நுழையும் (அதே)தோழி, அவனை நோக்கி ஓடி வருகிறாள்!

“போச்சு.. எல்லாமே போச்சுடி!”

“ஏய் லூசு. என்னாச்சு உனக்கு? என்ன உளர்றே?”

“யாரு நானா லூசு! அவளை நம்பி மோசம் போனியே, நீதான் லூசுப்பையன். உன்னோட ஆசைக்காதலி இருக்கானே அவன உனக்கு மட்டும் காதலி இல்லே. இன்னொருத்தனையும் லவ் பண்றா”

“நிறுத்து. பொண்ணா இருக்கதால அறையாமப் பேசுறேன். இல்லேன்னா இந்நேரம் வகுந்திருப்பேன்”

“அவ உன்ன நல்லா ஏமாத்திட்டு இருக்கான்னு சொல்றேன். நீ என்னடான்னா என்னை அடிப்பேன்னு சொல்றே!”

கோபத்தில் அவன் முகம் ரத்தச் சிவப்பாகிறது!

“அவளைப் பத்தி எனக்கு எல்லாம் தெரியும். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உன் மேல நான் வச்சிருக்க இமேஜைக் கெடுத்துக்காதே. ஓடிப்போ”

“ப்ரண்டாச்சே, பாவம்னு பார்த்த்தைச் சொல்லி ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன் பாரு. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். எவனோ ஈவினிங் காலேஜ் பையன்னு நினைக்கிறேன். ரெண்டு பேரும் ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் இருக்க பார்க்ல நெருக்கமா நின்னு பேசிக்கிட்டிருந்தத நானே என் கண்ணால பார்த்தேன்”

“வாயைக்கழுவு முதல்ல. நீயும் நானும் கூடத்தான் இப்ப நெருக்கமா உட்கார்ந்து பெசிக்கிட்டு இருக்கோம். அதுக்காக நாம லவ்வர்ஸ்னு சொல்லிடறதா?!”

“பேச்சென்ன பேச்சு.. கொஞ்சாத குறைதான் அங்கே அவங்க ரெண்டு பேரும். கருமம். இப்டியா பட்டப்பகல்ல ஒரு பப்ளிக் ப்ளேஸ்ல ஒட்டிக்கிட்டும் கட்டிக்கிட்டும் இருப்பாங்க!”

சொல்லியபோதே தன் தோளை அனிச்சையாக உரசிய அவளை கோபப்பார்வையால் எரிக்கிறான் அவன்.

“நீயும் நானும்கூட இப்ப உரசிக்கிட்டுதான் உட்கார்ந்திருக்கோம், தெரியும்ல!”

சட்டென விலகுகிறாள் அவள்.

“இங்க பார். என்னை நான் எவ்வளவு நம்புறேனோ அவ்வளவுக்கு என் காதலியையும் அவ காதலையும் நம்புறேன். அவ உதட்டால என் பேரைச் சொல்லி கூப்பிடுறப்ப, உயிரால கூப்பிடுறதாத்தான் உணர்றேன். மரியாதையா நீ இப்பவே இந்த இடத்தைவிட்டுப் போயிடு. இல்லே.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”

ஆத்திரமும் அழுகையும் ஏமாற்றமுமாக இருகும் தோழிப்பெண்ணின் முகம் க்ளோசப்பில் கொதிக்கிறது!

காட்சி : 3 இடம் : ரவுண்டானாவுக்கு அருகே இருக்கும் அந்தப் பூங்கா
காதலர்கள் இருவரும் ஒருவர் கையை இன்னொருவர் இருகப்பற்றி இருக்க, நெகிழ்ந்த கண்களுடன் தோழிப்பெண் நிற்கிறாள். பேசுகிறாள்..

“மன்னிச்சுக்கங்க! நான் செஞ்சது தப்புதான், தெரிஞ்சே செஞ்ச தப்புதான்! உங்க ரெண்டு பேரோட காதலையும் சும்மா டெஸ்ட் பண்ணிப்பார்க்க முடிவெடுத்தேன். இல்லாததையும் பொல்லாததையும் கதை கட்டிவிட்டு, இப்ப உங்ககிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டேன். அதுவும் ஒருவகையில் நல்லதுக்குத்தான். இப்ப நான் ஒரு உண்மையை உணர்ந்திருக்கேன்”

பேசியபடியே நிலாப் பெண்ணின் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்கும் தோழி பஞ்ச் டயலாக் பேசுகிறாள்..

“சத்தியமா சொல்வேன் இப்ப. நீ அவன் மேல வச்சிருக்க காதலைவிட அவன் உன்மேல வச்சிருக்க காதல் ரொம்ப பெருசு. உண்மையில நீ கொடுத்துவச்சவ!”


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொருட்பால், அதிகாரம்: 43. அறிவுடைமை, குறள்: 423
யார் சொல்ல எதைச் கேட்டாலும் அந்த விஷயத்தில் உண்மை என்னவாக இருக்கும் என உணர்வதே அறிவாகும்.

நன்றி: கெளதம்