Showing posts with label கடவுள் வாழ்த்து. Show all posts
Showing posts with label கடவுள் வாழ்த்து. Show all posts

Jan 25, 2007

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது.