Aug 31, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 24

மீண்டும் ஒரு முறை
சீவி சிங்காரித்து
பொன்னகையும் புன்னகையுமாய்
ஒரு பெண் பார்க்கும் படலம்
மீண்டும் ஒரு முறை
போலியாய் புன்னகைத்து
ஊருக்கு போய் கடுதாசி போடுறோம்
எனும் "மா"ப்பிள்ளை வீட்டுக்காரர்கள்
எனைப் போலவெ
தேய்ந்தும் வளர்ந்தும்
காத்திருக்கிறாயோ நிலவு பெண்ணே

ஆனால் உனக்காவது

இன்னும் இருக்கிறது ஆகாயம்


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 23

குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 22

மண்ணுலக மாந்தர் வகைவகையாய் மாசுகளை
அன்றாடம் அன்பாய் வளர்க்கின்றார்- மன்தகையின்
இத்தகைய கோலங்கள் எண்ணற்ற வேதனைக்கே
வித்தூன்றும் என்றே விளம்பு.

புகைமாசு இங்கே புவியை விழுங்கும்
பகைமாசு! ஐயகோ! பாவம்- குகைக்குள்ளே
மாட்டிய மானாகத் தானே தவிக்கின்றார்!
ஈட்டிமுனைச் சாவென்றே சொல்.

ஒலிமாசு காதுகளில் உட்புகுந்து சென்று
உளிபோல குத்திக் குடையும்- வழியெல்லாம்
நாடிநரம்புகளை தூண்டி துடிக்க வைத்து
ஓடவைக்கும் என்றே உணர்.

குளிர்சா தனப்பெட்டி குப்பைகள் கூளம்
தெளிக்கின்ற மாசுகளோ தேங்கி-அழிக்கின்ற
ஓலத்தை நாமோ உணராமல் வாழ்கின்றோம்!
காலந்தான் கண்ணருகில் காண்.

இப்படித்தான் எண்ணற்ற மாசுகளோ விண்ணகத்தை
பற்றித்தான் ஒசோன் படலத்தை- வெற்றிடமாய்
மாற்றினாலும் இன்னும் இருக்கிறது ஆகாயம்!
வாட்டுகின்ற மாசகற்றி வாழ்!
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 21

அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலச்சுட்டேன்

கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்

புழக்கடையில்
துணி துவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்

ஒரு ஆர்ப்பாட்டம், கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில
கொடுத்துட்டாங்களோ

தலை மேலே
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்


இன்னும் இருக்கிறது ஆகாயம்


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 20

விண்ணிருந்து நட்சத்திரமொன்று உதிர்ந்த கணத்தில்
கண் மூடி நானுன்னை யாசித்தேன்

மேகமிடித்து மழை பொழிந்த தினத்தில்
மின்னல் வெட்ட, உன்னை நான் சந்தித்தேன்

மெரீனா... ஒண்ணு வாங்குங்க"
என் வாழ்வின் பௌர்ணமி அன்றுதான்

கடலலை கால் தொட கதையளக்கையில்
என் வானெங்கும் நீந்திக் கொண்டிருந்தன
அன்னப் பட்சிகள்

"என்னைப் பிடிச்சிருக்கா" நீ கேட்ட விநாடி
வானவில்லொன்று வெடித்துச் சிதறி
விண்ணெங்கும் ரங்கோலி!

தயங்கியவாறே நானுன்னை தீண்ட
முத்தமிட்டுக் கொண்டிருந்தன
வானும் கடலும், தூரத்தில்

"அருந்ததி தெரியறதா பாருங்கோ"
உன் விரலழுத்தி சிரித்தேன், சிரித்தோம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 19

இன்னும் இருக்கிறது ஆகாயம்!
இவை யாவும் பார்த்துக் கொண்டு
இன்னும்தான் இருக்கிறது ஆகாயம்!

சொந்த நாட்டில் சொந்த ஊரில்
சொந்த மொழியில் பேச நாணியே
நுனி நாக்கு மொழி பேசிடும்
உலுத்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!


தமிழ் மறையாம் திருக்குறளை
தினம் ஒரு பத்து சொல்லி
"ஆடவா" எனும் அழைப்பினைப்
பார்த்தும் பாராதது போல் செல்லும்
நிலை கெட்ட மாந்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தன் நடுவே "தான்" பெற்ற
தனதொரு குழந்தையினை [ப்ளூட்டோ]
இல்லையென்று தள்ளிவிட்டு
எள்ளி நகையாடும் அறிவிலிகளைக்
கண்டிங்கு சிரித்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

யார் குடியை யார் கெடுக்க
ஏது நல்ல நேரமென்று
எண்ணங்களைக் கசக்கிப் பிழிந்து
இன்சொற்கள் நிரப்பி இட்டுவரும்
"பூக்களைப்" பார்த்து நொந்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டவர் : நாமக்கல் சிபி

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 18

விதை விதைத்து, களை புடுங்கி, உரமிட்டு, ஆடவரும் பெண்டிரும்
ஒன்றாய் உழைத்த பின்னும் - அமோக விளைச்சலின்போது
" மானம் தப்பாது மும்மாரி பொழிஞ்சு காப்பத்திட்டியே சாமி!"
-என்று வானத்தை நோக்கி கைக்கூப்பிய ஏழை குடியனவனின்
ஆனந்த கண்ணீரில் வானத்தின் பிம்பம் கண்டு உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

கதிரவனையே மறைக்கும் வானளாவிய கட்டிடங்களை கண்ட போதும்,
காற்றையே கிழித்துச் செல்லும் வானவூர்தியை கண்ட போதும்,
எண்ணற்ற அறிவியலின் சாகசங்களை கண்ட போதும் - ஏற்படாத மகிழ்ச்சி,
வர்ண ஜாலங்களின் தலைவி வானவில் -லை தொடும் தூரத்தில் கண்டு,
குதூகலமாய் கைக்கொட்டி சிரித்த குழந்தையின் புன்சிரிப்பில் மெய்சிலிர்த்து உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, உறவு அறியாது
குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த உயிரை காப்பாற்ற தன் இரத்தத்தை
தந்த என் நண்பனின் கரம்பிடித்து - "வானமும் வையகமும் உள்ளவரை , நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் தம்பி"
என்று நாதழுத்த அன்னையின் பாசத்தையே மிஞ்சிய மனிதநேயத்தை கண்டு உறைந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

"வெள்ளையும் கருப்புமாகிய நிரந்தர நிறத்தை விடுத்து, வானமே - நீ நீலமானதேனோ?" - என்று நான் வினவ,
"ஆலகால விஷத்தையுண்டு உலகை காத்த சிவன் நீல்கண்டனானது போல
நாலுகாலமும் உயிரின் மேன்மைக்காக பாடுபடுமுன் முயற்ச்சியும்,நம்பிக்கையும் கண்டு
உவகையில் பூத்த உள்ளக்களிப்பே இந்த நீலம்" -என்று நீ கூற, திக்குமுக்காடி பிதற்றினேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!!!"


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 17

அன்று நீ என்னை
அழைத்தபோது
வேறு ஏதோ கோபத்தால்
தொலைபேசியில்
உன்னிடம் எரிந்து விழுந்தார்
என் துணைவர்

வீடு திரும்பி
இதை அறிந்துகொண்டபின்
உன் எண்ணை அழைத்தால்
பதிலில்லை
அதற்கு அடுத்து சில நாட்களும்
அப்படியே

நிலையை விளக்கி
மின்மடல் கொடுத்தபோது
குழந்தைபோல் விளக்கமா
தவறாக புரிந்துகொண்டாய்
தொலைபேசி சரியில்லை
என்று உன் உடனடி மின்மடல்

மேகங்கள் ஓடினாலும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 16

தனிமையைத் தவிர
தைரியம் வளர்க்கும் சாதனமில்லை
தனித்திரு...

அதிகப் பசியோடு உண்ண ஆரம்பி
குறைவான பசியோடு உண்டு முடி
பசித்திரு...

கனவுகளில்கூட
கதிரவனை வெல்லு
விழித்திரு...

களத்தை தேர்ந்தெடுத்து
கத்தியை கூர்படுத்து
களத்தில் கத்தியையும் புத்தியையும்
கலந்து பயன்படுத்து

பாலைவனத்தில்
தாவரமாயிருந்தாலும்
காற்றின் ஈரப்பதம் பருகு

சுறுசுறுப்பில் தேனீயாயிரு
நிதானத்தில் ஞானியாயிரு

வம்புகளைக் கண்டி
வெம்புவதை விடு
கச்சைகளின் மேலுள்ள
இச்சைகளை சுடு

நிலவை குனிந்து பார்
நிழலை நிமிர்ந்து பார்
வாழ்வை வார்த்துப் பழகு

செவிகளைச் செலவழி
வார்த்தைகளுக்கு வாய்ப்பளி
வரங்களுக்கு வாய்திற

உலகம் அண்ணாந்து பார்க்கும் வண்ணம்
உயரக் கொண்டுவிடு எண்ணம்
எப்போதும் நினைவு தப்பாதிரு

வாய்ப்பை வசப்படுத்து
வெற்றியை வசியப்படுத்து

கர்வம் தலைக்கேறினால்
அண்ணாந்து பார் அமைதியாய்
இன்னும் இருக்கிறது ஆகாயம்...

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 15

சீறிச் சென்ற நதியும், ஓங்கி வளர்ந்த மலையும் - உயிர் தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய உயிர் - நீரிலிருந்து நிலத்திற்கு, ஊர்வனவாவும் பறப்பனவாவும் - பரிணாம வளர்ச்சிக்காக மாறியது,

பரிணாம வளர்ச்சி குரங்கிலிருந்து மனிதனாய் - சிந்தனை தோன்றுவதற்காக மாறியது
தோன்றிய சிந்தனை - கல்லில் இருந்து கோட்டையாய், புல்லிலிருந்து பயிராய் - சமுதய வளர்ச்சிக்காக மாறியது,

சமுதய வளர்ச்சி - எண்ணிலிருந்து எழுத்தையும், எழுத்திலிருந்து கல்வியையும் - வாழ்க்கை வளமாக தோன்றியது
தோன்றிய வாழ்க்கை - கோட்டையிலிருந்து வானூர்தி தொடுத்து, பயிரிலிருந்து மருந்து எடுத்து - மேன்மையாய் மாறியது,

மேன்மையோ -
"மாறுமே இந்த பஞ்ச பூதமே, மாறாத நானே இங்கு வேதமே" - என்று
கொக்கரித்த மாற்றத்தையே,
காலமென்னும் கருவியால் மாற்றியது,

உயிர் தோன்றிய அன்றும் இருந்தது ஆகாயம் , "மாற்றமே" மாறிய -
"இன்றும் இருக்கிறது ஆகாயம்!!"


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 14

நாட்காட்டியின் தாள்கள் ஒவ்வொன்றாய் கிழிந்தாலும்
நம்பிக்கை ஒளியேற்ற மறுக்காதே - நீ
நாளையென்று தள்ளிப் போடாதே...நாளை...!!
பூக்கள் வாடுவதால் பூக்காமல் இருப்பதில்லை
பூகம்பம் வந்தாலும் புவி சுழலாமல் இருப்பதில்லை!!

இல்லாத ஒன்றை நினனப்பதைவிட
வாழ்வே இல்லாதவரை நினைத்துப்பார் - உனக்கு
வாழ்வின் பொருள் விளங்கும்!

மெழுகின் உருகலில்தான் ஒளி பிறக்கும்..
வாழ்வில் மெழுகை உதாரணமாக்கு - உன்
வாழ்வும் ஒளிமயமாகும்...!

உன் சிறு புன்னகையின் விளிம்பில்
இன்னொரு உயிரின் மகிழ்வை உணரத்துவங்கு!
உன் சிரிப்பின் கோடியில் ஆயிரம் இதயங்கள்...
புன்னகையுடன் எதிகொள் ஒவ்வொரு புயலையும்
புழுதியாய் மறைந்துவிடும் உன் புன்சிரிப்பால்...

இசைத் தட்டுகளின் ஒலிக்குள்ளும்
இசை பாடும் தென்றலுக்குள்ளும்
இருக்கிறது வாழ்க்கை சத்தமின்றி!

நம்பிக்கையினை நாடியாய் கொண்டுவிடு
வானம் உன் வசமாகும்
வாழ்க்கையும் சுகம் கொடுக்கும் - ஏனெனில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்...

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டவர் : நாமக்கல் சிபி

Aug 29, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 13

மறுமொழிகளை மட்டுறுத்தலாம் என்றெண்ணி
பின்னூட்டப் பெட்டி திறந்தேன், ஒரு பின்னிரவில்!
வெறுமை வந்தென் முகத்தில் அறைந்தது
துணையற்ற நெடும்பயணம் போன்று

கடை விரித்தேன் கொள்வாரில்லை...
முண்டாசுக் கவியின் வலி புரிந்ததெனக்கு!

இலையுதிர் காலத்து சருகு போலே
பெயரற்று போய் விடும் உயர் நோக்கோடு
வந்து சென்றிருப்பர் பலர்
நான் சென்று வருவதைப் போன்றே

எண்ணங்களை பதிவு செய்யாது
எண்ணிக்கைகளை மட்டுமே
கணக்கில்வைத்துக் கொள்ளும்
என் *'வருகை எண்ணி' , சொல்லிற்று...

கவிதையொன்று வடித்து நிமிருகையில்
கடவுளானேனென கர்வம் வந்து செல்லும்
கண நேரமேயானாலும், அதுவும் சொல்லிற்று
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கண்சிமிட்டும் நட்சத்திரங்களும்
தேய்ந்து வளரும் நிலவுமில்லாவிடினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,
இளஞ்செங்கீற்றாய் விடியலுடன்!


போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி.

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 12

எல்லாரும் நரகமா சொர்க்கமா என்று பயப்படும் நேரம்
நீ சொர்க்கத்தில் அனுமதி கேட்டு வாங்கி
அங்குள்ள ஆண்டவனை கலாய்ச்ச
சனி ஞாயிறு நரகத்திற்கு வருவாயென நினைக்கையில்
என் தலைக்கு மேல் இன்னும் இருக்குது ஆகாயம்
என்று அலுத்துக்கொள்கிறேன்

எனக்கு உன்னிடம் கேட்க நிறைய இருக்கிறது
புழு கடிக்கும் போது வலிக்காது தெரியும், ஆனால்
சிரிப்பாய் இருக்குமா - மண்ணுக்குள்?
உன்னோடு சேர்ந்து "உவ்வே" என்று உரக்கக் கூவி நகைக்க
என்னோடு வருவதற்கு முன், அவசரமாய் சென்றதேன்?
இன்னும் உன் இறப்பு என்னுள் இறங்காமல் போன மாயம்.

உன் அனுபவத்தைக் கொண்டு வளற நான் ஆசைப்படுகையில்
மரணம் மட்டுமே இனியதாய் நீ ஏற்கனவே சென்று பார்த்திருப்பதால்
இப்போது நான் வர மாட்டேன் நானாக
இன்னும் இருக்குதடி நான் படிக்கும் பாடம்
அன்றாடம் காண ஆயிரம் அற்புதங்கள்
அன்போடு விளையாட ஆயிரம் ஆனந்தம்
உன்னோட பேச ஆயிரம் இருக்கு மனக்காயம்
ஆனால் உனக்கும் எனக்கும் நடுவில் எரியாமல் என் காயம்

போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 11

இழப்பின் வேதனைகளுக்கு
மரிப்பதா தீர்வு?

சூரியன் சுட்டெரித்தாலும்
உடல் கிழித்து மின்னல்கள்
வெளிவந்தாலும்

நட்சத்திர அணிகலன்கள்
உதிர்ந்தாலும்

இடிகள் மிரட்டினாலும்

அவ்வப்போது
மழையாய் அழுதாலும்

வீழ்வதைப் பற்றி
சிந்திக்காமல்

இன்னும் இருக்கிறது பார்
ஆகாயம்.

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 10

இன்னும் இருக்கிறது ஆகாயம்

இன்னும் என்ன இருக்கிறது?
காவிகட்டித் துறவு- எனினும் ஆயிரம் உறவு!
அங்கே துறவும் உறவும் - காணவில்லை

படித்து அடித்துப் பிடித்துக் கல்வி-
கற்றும் வேலையில்லை, இருக்கும்
இடங்களுக்கு ஆளுமில்லை!

ஆசிரியனுக்குள் ஆர்வமில்லை,
மாணவருக்குள் ஆக்கமில்லை!
கல்வி கலவி ஆனது-மேன்மை இல்லை!

பெற்றவளுக்கு பால் தர நேரமில்லை
அப்பனுக்கு கதை சொல்ல நேரமில்லை
மகனுக்கோ திருமணத்துக்கு இருவரையும்

எனினும்,

அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
இன்னும் இருக்குது ஆகாயம்!

கரிமல, எரிவகை மாசுகள் நிறைந்தும்
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
இன்னும் இருக்குது ஆகாயம்

கதை சொல்லி உணவூட்டும் காலம் இல்லை
நிலவுகண்டு கைகொட்டும் வானமில்லை
கட்டடங்கள் கண்மறைக்க வானமெங்கே
வானளக்க வளைந்து நிற்கும் வானவில்லெங்கே?
எனினும், இன்னும் இருக்குது ஆகாயம்

கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் அத்தனையும்
விட்டு விடுதலையாக
இன்னும் இருக்குது ஆகாயம்

கற்பனை விரிய எல்லையை சொல்ல
பறந்தும் உயர எட்டா நிலையை
துறந்தும் ஒளியாய் அண்டம் அளந்து
பிறந்து மீண்டும் உயர்பறக் குருவி
அறிந்த பல் ரகசியம் அறிந்தும் அமைதியாய்
இன்னும் இருக்குது ஆகாயம்

அளவில் பெரிது, பெரிதிலும் பெரிது
அத்தனை ஆக்கம் ஆட்டம் அழிவு கண்டும்
அமைதி காக்கும் விசுவரூபம்
இன்னுமிருக்குது ஆகாயம்

#போட்டியாளர் சார்பில் பதிவிட்டது தேவ்

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-9

கரிமல எரிவகை மாசுகள் நிறைந்தும்
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
கோளில் ஒன்று குறைந்ததென் றாகியும்
சூழல் நசிந்து ஊழல் பெறுகினும் - பாரில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தாய்காட்டி உணவூட்டும் நிலவு மெங்கே
கட்ட டங்கள்கண் மறைக்க வானமெங்கே
எட்டிப் பார்க்கும் வானவில்லின் ஜாலமெங்கே?
காலை மாலை கதிரவனின் வர்ணமுமெங்கே? - எனினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் மனதுக்கு எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் எல்லாம்
விட்டு விடுதலையாகி பறக்கும் எல்லை - விதிக்க
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கற்பனை விரிய எல்லையை விரிக்க
பறந்தும் உயர எட்டா நிலையை
எண்ணிய படியே எங்கும் பறக்க
விண்ணதின் உச்சம் கண்டிட விழைய - உயர்த்த
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
கற்பனை கனவுகள் நனவென வாக்க
கல்பனா சாவ்லா சாவிலும் வாழ்ந்திட - திறந்து
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தொடுதல் இன்றி எல்லை காட்டும்
விடுதல் வந்தால் விடுதலை நாட்டும்
ஆதாய மின்றி ஆதார மின்றி
அதுவே அதற்கு சாட்சியமாக - எங்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

போட்டியாளர் சார்பில் பதிவிட்டது தேவ்

கவிதை போட்டி -1 : இனிமையான அறிவிப்பு

தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப் பெறும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் படைப்புகளை, கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது குறித்த தகவல்கள் மீண்டும் ஒரு முறை தங்கள் நினைவிற்காக:

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"


* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)


* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல் முகவரி - kavithai.tsangam@gmail.com


விதிமுறைகள்:

1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது

4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.

5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும்.

6. தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)

7. உங்கள் படைப்பு, தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.

8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.


இது வரை போட்டியில் பங்கு பெறுவதற்காக போட்டியாளர்களால் அனுப்பப் பட்ட கவிதைகளை வாசிக்க இங்கு சுட்டவும்.
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-1
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-2
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-3
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-4
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-5
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-6
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-7
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-8


கவிதை போட்டி தேர்வு விதிகளுக்கு உட்பட்டு, போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப் படவில்லை. இருப்பினும் கவிதையினை வாசிப்பவர்கள், கவிதைகளைப் பற்றிய தங்களது கருத்தினை வழங்கி படைப்பாளர்களை ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம்.

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-8

மழையில் நனையும் கார்
நடுவீதியில் நின்றவுடன்
கூப்பிடாமலேயே ஓடிவந்து
தள்ளிவிடும் தெருவில் வசிக்கும் சிறுவர்கள்...
பிச்சைக்காரருக்கு
சூடான சாதம் போடும்
பக்கத்து வீட்டு பாட்டி...
வழி தெரியாமல் தவிக்கும்
வெளியூர் காரருக்கு
கூடவே வந்து பஸ் ஏற்றி
விடும் கடலை விற்பவர்...
கீழே தவற விட்ட பணத்தை
கூப்பிட்டு எடுத்துக் கொடுக்கும்
வழிப்போக்கர்...
இவர்களுக்காக
இன்னும் இருக்கிறது ஆகாயம் !!!!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

Aug 28, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-7

மேகத்தால் எங்கும் கருப்பு நிறமாகியும்
விமான இயந்திரங்களின் இரைச்சலால் செவிடாகியும்
நீதி கேட்போரின் நாக்கை அறுப்பதினால் ஊமையாகியும்
பட்டினி மரணங்களின் ரத்தக்கண்ணீரால் குருடனாகியும்

எந்த ஜாதி என்றறியும் சோதனையில்
ஆண்மை பெண்மை இரண்டுமிழந்து திருநங்கையாகியும்

கோபத்தால் தனது கை கால்களை தானே முறித்து ஊனமுற்றதென்றாகியும்

பிஞ்சுகுழந்தைகளின் படுகொலைகள்!
எங்கும் நடக்கும் யுத்தங்கள்! மற்றும் மனிதத்தின் மரணங்கள்!
இவையெல்லாம் கண்டு கலங்கிய இதயம்
பொடிப்பொடியாய் உடைந்தும்

கற்பழிக்கப்பட்ட ஏழைப்பெண்களின் பிரசவவலியால் துடித்தும்
எங்கும் எல்லா ஜீவராசிகளின் அழும் குரல்கள் கேட்டு தவித்தும்

ஓசோனின் ஓட்டைவழியே சொல்ல முடியா வலிகளை சகித்தும்
சூரிய வெப்பத்தில் கடினமாய் உருகியும்
போராடிப் போரடி மிஞ்சியிருக்கும் கொஞ்சம் உயிருடன்
இன்னும் இருக்கிறது ஆகாயம் !

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-6

கவிதையாமா கவிதை
மடக்கி போட்டு
திருப்பிப் போட்டு
ரெண்டு ரெண்டா படிச்சுக் காட்டு
அதான் தம்பி கவிதை

புரட்சியாமா புரட்சி
முக்கி முனகி
திக்கித் திணறி
கண்டதையும் பேசு
கைதட்டு வாங்கிட்டா
மறந்துடுடா ராசு
அதான் தம்பி புரட்சி

ரவுசுக்குனே பேசுறவனும் உண்டு
எதையெதையோ புலம்புறவனும் உண்டு
அர்த்தம் கெட்ட பருத்திகொட்டைகள்
பேசத்தானே செய்யும்
பேசிப் பேசி செத்துப் போனா
உலகம் எப்படி உய்யும்?

அறிவுரை சொல்லட்டுமா அய்யா?
தேவையில்லைன்னு சொல்லுறியா ங்கொய்யா!

அது...
காசில்லாம கிடைக்கும்
ஓசின்னாலும் கிடைக்கும்
ரெண்டுமே ஒண்ணா?

சீனு தம்பி சீனு
நீ கண்டுக்காத கண்ணு

ஏண்டா தலைப்புக்கு எழுதுன்னா
என்னடா சலம்புற?

இன்னாமே தலைப்பு?

"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

எழுதிகின்னா போவுது...

கிளம்புதுடா ராக்கெட்டு
குறிச்சுக்கடா மெனக்கெட்டு

ராசா....
மேலே மேலே போறேன்
அட நான் போயிகினே கீறேன்

காணமடா ராசா
ஆகாயத்த காணோம்


"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

வெளங்குச்சு!!!

பேண்ட் போட்ட யக்கா
அட மேல்த்தட்டு மக்கா
எங்கே எடுத்த சொக்கா?
சும்மா கீது சோக்கா

எங்க இருக்கு டப்பு?
சாப்ட்வேரு யப்பு!
அம்புட்டுதானா வளர்ச்சி
இன்னும் இருக்கா கிளர்ச்சி?

இல்லடா ராசு இல்ல

சேர்த்துகினே போலாம்
சொத்து சேர்த்துகினே போலாம்
எம்புட்டு தூரம் போலாம்
கணக்கில்லாம போலாம்
அப்போ எழுதிக்க
"இன்னும் இருகிறது ஆகாயம்"

வளருது நாடு
சூப்பரா
வளருது வீடு

படிச்சா தம்பி பாரின்னு
குடிடா நீயும் செம "ஜின்னு"

பில்டிங் மேல பில்டிங்கு
புளோரு மேல புளோரு

முட்டாத வரைக்கும் வானம்
தலையில தட்டாத வரைக்கும் வேணும்
ஸோ...


"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

இப்படியே கிறுக்கினா
வெளுத்துடும்டா சாயம்
முடிச்சுக்குடா சகாயம்

கடைசியா மட்டும்....


இன்னும் இருக்கிறது ஆகாயம்

அட போடா நீயும் வெங்காயம்.

- உட்டாலக்கடி பாட்டுக்காரன்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

Aug 22, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-5

மரணத்தின் வாசலுக்கு துணைக்கழைப்பது தெரியாமல்
குழந்தையின் கைப்பற்றி செல்லும் தாய்

கண்களில் கனவோடும் கைகளில் வாழ்க்கையோடும்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்

காத்திருக்கும் குடும்பத்தின் கவலை தீர்க்க
பணிக்கு செல்லும் தலைவன்

நழுவும் நிமிடங்களை பிடித்திழுத்து
நிரந்தரமாக்க துடிக்கும் அன்பு காதலர்கள்

கண்மூடி திறக்கும் முன்
கனவுகள் சிதறின ரத்த துளிகளாய்

காலங்கள் மாறினாலும்
தேசங்கள் மாறினாலும்
யுகங்கள் தாண்டி மீண்டும் மீண்டும் அந்த நிகழ்வு அரங்கேற

ஒரே மெளன சாட்சியாய்
இன்னும் இருக்கிறது ஆகாயம்,

என்றாவது யுத்தம் மறைந்து
மனிதம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில்.


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

Aug 21, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-4

மையிருட்டில் அமர்ந்து ஒரு முறை யோசித்தேன்,
இன்னும் என்ன மீதம் இருக்கிறது என் வாழ்வில்,
திறமைக்கேற்ற வேலை,
மனம் மகிழ கை நிறைய சம்பளம்,
சிறிதாய் இருந்தாலும் சிறப்பாய் ஒரு சொந்த வீடு,
ஆனாலும் அமைதியில்லை,
ஓரிடம் தங்காமல் அலைபாயுது மனது.

ஜன்னல் வழி நோக்கினேன்,
என் ஜன்னலின் வழியே சரிந்து முகம் காட்டி சிரித்தது நிலவு,
நிலவின் பிம்பம் என் மேஜை மேலே,
புன்னகை காட்டி மின்னலென
மனதில் தோன்றியது அவள் முகம்.

இன்னும் என் ஆகாயத்தில் நிலவு இல்லை?
பெளர்ணமி காண ஏங்குது என் காதல்.
சுறுசூறுப்பாய் அவளுக்கு எழுதி முடித்தேன் ஒரு காதல்(காவிய) கடிதம்,
கையெழுத்திட்டு நிமிர்ந்தேன்.

அட இன்னும் இருக்கிறது ஆகாயம்!!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

Aug 18, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-3

'ஆகாயம் ஒரு மாயை'
அறிவியல் சொல்லும் உண்மை.

சூரிய ஒளி உடைபட்டு
நீலம் மட்டும் தெரிகிறது - அங்கே
தேவருமில்லை அசுரருமில்லை
சந்திரன் உண்டு
ஆனால்தெய்வமாயில்லை.

பிதாவுமில்லை சுதனுமில்லை
ஆவி உண்டு
பரிசுத்த ஆவியில்லை.

மரணப் பரிசாய் கன்னியருமில்லை
மதங்கள் சொல்லும்
சுவர்க்கமுமில்லை.

ஆகாயம் ஒரு மாயை.

மடமை பூசிய மனங்களிலேயே
இன்னும் இருக்கிறது ஆகாயம்.


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது

Aug 17, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-2

உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால் கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை-1

ஒரு சிறிய வட்டம்,
அதில் நான் மட்டுமே இருந்தேன் !

வட்டத்தை கொஞ்சம் பெரிது படுத்தினேன்
என் குடும்பம் அதற்குள் வந்தனர் !

வட்டத்தை மீண்டும் கொஞ்சம் பெரிது படுத்தினேன்,
எனது மொழிப் பேசுபவர்கள் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மீண்டும் அதைவிட பெரிது படுத்தினேன்
எனது தேசத்தினர் அதற்குள் இருந்தனர் !

வட்டத்தை மிகப் பெரியது ஆக்கினேன்,
நான் வாழும் பூமி அதற்குள் இருந்தது !

அடுத்து என்ன செய்யலாம், எண்ணியே மேலே பார்த்தபோது,
'இன்னும் இருக்கிறது ஆகாயம் என்றும்,
ஆகாய வட்டத்துக்குள் பிரபஞ்சத்தை இணைத்துவிடு' என்று
சுட்டெறித்துச் சொன்னது சூரியன் !
குறுகிய வட்டத்திற்குள் நான் மட்டுமே இருந்தேன் !
விரிந்த ஆகாய வட்டத்திற்குள் பிரபஞ்சமே இருந்தது !

எல்லைக்குள் அடக்க முடிந்தவைகளை கூறுபோட்டபின்,
நாடுகளும், நாமும் கூறுபோட முடியாமல்,
எல்லையற்று இருப்பதால் என்றுமே ஒன்றாகவே
இன்னும் இருக்கிறது ஆகாயம் !

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா

Aug 16, 2006

கண்டுபிடிங்க-யார் இவர்கள்?

படம் போட்டு, தெளிவுரை சொல்லி, பொதுஅறிவு கேள்வி கேட்டு பதில் சொல்லிவிட்டவர்களே. தமிழ் அறிஞர்கள் பலரையும் இடதுபுறம் படம் போட்டு காட்டியுள்ளோம், கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். இது உங்கள் தமிழ் அறிவுக்கு ஒரு சவால்....

Aug 15, 2006

சுதந்திரப் பயிர்

சுதந்திரப் பயிர் தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா!
இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு கண்ணற்ற
சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? எந்தாய்!
நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து நொந்தார்க்கு
நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயா தீனமெமக் கில்லை
யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?
இன்று புதிதாய் இரக்கின்றோ மோ?
முன்னோர் அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே

- பெற்ற சுதந்திரத்தைப் பேணும் வலிமையைத் தருவாய் இறைவா!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

Aug 13, 2006

அறிவிப்பு

வரும் வியாழன் அன்று எதிர் பாருங்கள்

என் தமிழ்!

மணலில் பிறந்து
களிமண் தளத்தில் தவழ்ந்து
பனை ஓலையில் நடைபழகி
காகிதத்தில் வளர்ந்து
இன்று கணினி மூலம்
உலகமெங்கும் - என் தமிழ்!

Aug 12, 2006

தமிழ்ச்சங்கம்!

உலங்கெக்கும் இருக்கும் தமிழ்ர்களுக்காக. ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர்கள் சங்கமாக இருக்கும் எங்களின் அடுத்த முயற்சியே இந்த தமிழ்ச்சங்கம்.
சிரிப்புச்சங்கத்தின்
முதல் வலைப்பதிவு வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரண்டாவது வலைப்பதிவே இந்தத்தமிழ்ச்சங்கம்.