Feb 6, 2007

"நட்பாராய்தல்" குறள் 791

"இப்பல்லாம் முழு அதிகாரத்துக்கும் பொருள் வேணாமாம்; ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கணுமாம்" என்றவாறு மயிலை மன்னாரை அணுகினேன்.

"ப்பூ! இம்புட்டுதானா? இதெல்லாம் நம்மளுக்கு ஜுஜுப்பீ! இப்ப நான் ஸொல்றதை எளுதிக்கோ! கதைக்காவ மண்டைய ஒடச்சு கற்பனை அல்லாம் பண்ண தேவையில்ல. அல்லாம் நம்ம புராணத்துலியே சொல்லியிருக்கு!மகாபாரதத்துல வர்ற கதை இது. எளுதிக்கோ" என்று தெனாவெட்டாகச் சொன்னான் மன்னார்!

இனி வருவது மன்னார் சொல்ல நான் பதிந்தது!


துர்வாசர்னு ஒரு முனிவரு இருந்தாரு.
அவரு ஒருநாளைக்கி திருதராஷ்ட்ரன் அரமணைக்கி வராரு.
அப்போ 'குந்தி'ன்னு ஒரு சின்ன பொண்ணு அவருக்கு பணிவிடை பண்ணினாங்க!
அத்தப் பாத்து முனிவருக்கு ரொம்பா சந்தோசமாயிருது.
'ஒனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரேன். அத்தை யூஸ் பண்ணினேன்னா அதுக்கான தேவதை வந்து. அத்தோட சக்தியை ஒனக்கு கொடுக்கும்'னு சொல்லிட்டு பூட்டாரு.


இந்தப் பொண்ணு சும்மா இருக்கக் கூடாதா?
வெளயாட்டுத்தனமா அந்த மந்திரத்த சொல்லிப் பாக்கலாம்னு செஞ்சுப்புடுது!

ஒடனே சூரிய பகவான் வந்து, 'ஏம் பொண்ணே என்னைக் கூப்பிட்டே! சரி, இந்தா; என் சக்தியை எடுத்துக்கோ'ன்னு சொல்லி ஓரு சூரிய அம்சக் கொளந்தையை, கவசக் குண்டலத்தோட, கொடுத்திட்டு மறைஞ்சிடறாரு.

இந்தப் பொண்ணுக்கா கையும் ஓடலை; காலும் ஓடலை!
இது தெரிஞ்சா ரொம்ப அவமானமாயிடுமேன்னு ஒரு பொட்டியில அத்த வெச்சு தன்னோட ஒரு மாலையையும் போட்டு ஆத்துல வுட்டுட்டாங்க.
அந்தக் கொளந்தைய ஒரு தேரோட்டி பாத்து எடுத்து தன் குளந்தை மாரி வளக்கறாரு.

இந்தக் கொளந்தை, நல்லா வளந்து, வில்லுவித்தைல ஒரு பெரிய ஆளா வராரு.

இத்த சரியாக் கவனிச்ச துரியோதனன், அதாம்ப்பா, ராசாவோட புள்ள, ஒரு சரியான சமயத்துல தன்னோட ராச்சியத்துல ஒரு ஊரைக் கொடுத்து அவனையும் ஒரு ராசாவாக்கி, 'நீதாண்டா என்னோட நண்பன்'னு சொல்லிடறான்!
அல்லாரும் நம்மை கொறைச்சலா பேசினப்போ, இவன் நண்பன்னு சொல்லிட்டானேன்னு, கொஞ்சம் கூட யோசிக்காம இவரும் அவன் கால்லுல வுளுந்திடறாரு.

அவ்ளோதான்!
இந்தாளு அதுக்காவ இன்னால்லாம் பண்றாரு தெரியுமா?
அவன் கெட்டவன்னு தெரிஞ்சாலும், அவனை வுட்டு பிரியாம கூடவே இருக்காரு.
ஒரு நேரத்துல தன்னோட தாயே வந்து 'நீதாண்டா என் புள்ள!'ன்னு கதற்ராங்க.
அப்பக் கூட அசையலியே!
'சர்த்தான் போம்மா! போயி, ஒன் புள்ள அர்ச்சுனனை ஒயுங்கா உசிரைக் காப்பாத்திக்கச் சொல்லு! ஏன்னா, என் நண்பனுக்காவ நான் அவன் தலைய வாங்கக் கூட தயங்க மாட்டேன்'னு கண்டிசனா சொல்லிடறாரு.
கடைசீல அந்த அர்ச்சுனன் கையிலியே உசிரையும் வுடறாரு.

இவரை நெனைச்சுதான் நம்ம ஐயன் இந்தக் குறளையே எளுதினாரோன்னு கூட எனக்கு டவுட்டு உண்டு!
அது இன்னான்னு கேக்குறியா!

இதான் அது1
'நட்பாராய்தல்' அப்பிடீங்கற அதிகாரத்துல மொதக் குறளா வெச்சிருக்காரு!
791ஆவது குறள் இது!
கேட்டுக்கோ!

"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]

இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும். ஒன்னியக் காவு வாங்காம வுடாது.

'சரி, சரி, வா! நா ஒங்கிட்ட அப்பிடி ஒண்ணும் கேக்க மாட்டேன்! நம்ம நாயராண்டை ஒரு டீ, வடை சாப்ட்டுட்டு போயி ஒன் பதிவ எளுது' எனச் சிரித்தபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!