Nov 28, 2006

கலைவாணரே உமைத்தானே

வாணரே கலைவாணரே
திரையுலகில்
உம்மையன்றி பலர் வீணரே
அவர்கள்
நகைச்சுவை என வருகையில்
வெறும் உடற் கோணரே


உன் கருத்து
உன் பட்டம்
உன் நடிப்பு
திருடித்தான் பலருக்குப் பிழைப்பு
அதனால் வியப்பதும் நிலைப்பதும்
உனது அன்றைய உழைப்பு


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வெற்றித் திருமகன் நீ
இது உனக்குத்தான் பொருத்தம்
வேறு யாருக்குச் சொன்னாலும்
ஏங்கேயோ உறுத்தும்


கிந்தனாரும் நல்லதம்பியும்
உலகத்திலே பயங்கரமான ஆயுதமும்
கண்ணே உன்னால் நானடையும் கவலையும்
மறவாத வகையறாவாக
பாட வேண்டும் தொகையறா


நவம்பர் 30ல் நீ பிறந்தாய்
ஐம்பதாம் ஆண்டில் மறைந்தாய்
ஆனாலும் தமிழர் மனிதில்
குறையாது நிறைந்தாய்
சமூகக் கருத்தும் நகைச்சுவையும்
ஒன்றாக்கி அதிலே உறைந்தாய்!


உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!
நீட்டோலை வாசியா நின்ற நல்ல மரமல்ல
மலர்ந்து கனியும் காட்டகத்து மரம்!


அன்புடன்,
கோ.இராகவன்

17 ஊக்கங்கள்:

said...

//உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!//
நன்றாக இருக்கிறது ராகவன்

said...

/காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வெற்றித் திருமகன் நீ//

said...

//உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!
நீட்டோலை வாசியா நின்ற நல்ல மரமல்ல
மலர்ந்து கனியும் காட்டகத்து மரம்!
//

கோடியில் ஒரு வார்த்தை இராகவன்.

Anonymous said...

ராகவா!
மிக நன்று!
அவர் புகழை அருமையாகச் சொல்லியுள்ளீர்!
யோகன் பாரிஸ்

said...

// ILA(a)இளா said...
நன்றாக இருக்கிறது ராகவன் //

நன்றி இளா

// சிவமுருகன் said...

கோடியில் ஒரு வார்த்தை இராகவன். //

உண்மைதான் சிவமுருகன். நானும் அதைத்தான் நம்புகிறேன்

// Johan-Paris said...
ராகவா!
மிக நன்று!
அவர் புகழை அருமையாகச் சொல்லியுள்ளீர்!
யோகன் பாரிஸ் //
நன்றி யோகன் ஐயா

said...

வளரட்டும் அவரது புகழ்!
எத்தனையோ பேருக்குக் காசு சம்பாதிக்கும் மரமாக மட்டும் இருக்கும் சினிமாவில் தானும் ஒரு மரமாக இருந்துப் பயன் தந்தார் கலைவாணர்.

வாழ்க.

said...

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி முத்திரை படைத்த நம் கலைவாணருக்குக் கவி அலங்காரம் செய்திருக்கும் நண்பர் ராகவனுக்கு மனமார்ந்த நன்றிகள்

said...

ராகவன்,

அருமையா சொல்லி இருக்கீங்க.
அப்ப கலைவாணர் பாடுன 'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' பாட்டு
வரிக்கு வரி உண்மையாப்போனதை நினைச்சா, இப்பவும் எங்களுக்கு ஆச்சரியம்தான்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!!!


தமிழ்ச் சங்கம். புதுசா இருக்கே? எப்ப ஆரம்பிச்சீங்க?

வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

அன்பு ராகவன்,

மீண்டும் சொல்கிறேன். சுருக்கமான, அவசரமான விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இந்தமுறையும் கொஞ்சம் விரிவாக.

தங்களின் கவிதை கண்டேன். அருமை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைவாணரைப் பற்றிய ஒரு புகழாரத்தை வாசிக்கும் சந்தர்பம் தந்தமைக்கு நன்றி.

ஆய கலைகள் 64-ல் நகைச்சுவையையும் சேர்த்ததற்குக் காரணமே, அது சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க மட்டுமின்றி, சீர்திருத்தவும் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

அப்படிப் பார்த்தால் கலைவாணர் அவர்களைப் பற்றி இன்றும் நாம் பேசுகிறோம் என்பதே அவரின் திறமைக்கான ஒரு வெற்றிதான்.

அவரின் திரையுலக வரலாற்றில் இருந்து இன்னும் சில தேன் துளிகள் இதோ.

1. ‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்’ என்ற பாடலில் ஒரு வரி…
‘நன்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணுலே… எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே’ (இந்த வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை)

2. ‘கண்ணே உன்னால் நானடையும் கவலை கொஞ்சமா’ என்ற பாடலில் ஒரு இடத்தில் கலைவாணரும், மதுரமும் சிரிப்பார்கள். இன்றளவும் வேறெந்த நடிக, நடிகையர் செய்ய முடியாத அப்பாவிச் சிரிப்பு அது. (கேட்டுப் பார்த்தால் உங்களுக்கே புரியும்)

3. ‘எங்கே தேடுவேன்… பணத்தை எங்கே தேடுவேன்… ‘ என்ற பாடலில் ஒரு வரி…’
‘திருப்பதி உண்டியலில் சரணடைந்தாயோ… ? திருவண்ணாமலை குகை புகுந்தாயோ… ?’ (தீர்க்க தரிசனம் என்பது இப்படி (யும்) இருக்கும்)

4. நடனக்காரன் என்றான் ஆடிக்காட்ட வேண்டும். பாடகன் என்றால் பாடிக்காட்ட வேண்டும். நகைச்சுவை நடிகன் என்றால் சிரித்துக் காட்டவும் வேண்டுமோ…
‘சிரிப்பு… அதை சீர் தூக்கிப் பார்ப்பதே நமது சிறப்பு’ என்ற பாடலில் வரும் விதவிதமான சிரிப்புக்களை மறக்கவே முடியாது.

யானையைத் தடவிப் பார்க்கும் குருடர்கள் போல, கலைவாணர் என்ற யானையை நாம் தெரிந்தவரைதான் சொல்ல முடியும். அப்படிச் சொன்னாலே அது பிரமிக்க வைக்கும்.

அந்த வகையில் தங்களின் கவிதாஞ்சலி ஒரு சுகானுபவம்.

Thanks Ragavan… !

+ நேசத்துடன்… இரா. அரங்கன்

said...

ஆகா! ஆகா! எங்கள் நாஞ்சில் தந்த நல்முத்து கலைவாணர் புகழ் வாழ்க!

said...

// பிரதீப் said...
வளரட்டும் அவரது புகழ்!
எத்தனையோ பேருக்குக் காசு சம்பாதிக்கும் மரமாக மட்டும் இருக்கும் சினிமாவில் தானும் ஒரு மரமாக இருந்துப் பயன் தந்தார் கலைவாணர். //

ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள் பிரதீப். அவரால் பிழைத்தவர் பலருண்டு. பின்னால் அவர்கள் எல்லாம் பெரிய மனிதராகவும் ஆனார்கள். ஆனால் கலைவாணரின் மறைவுக்குப் பின்னால் மதுரம் அவர்கள் கஷ்டப்பட்டதாகத்தான் சொல்வார்கள்.

said...

// தேவ் | Dev said...
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் தனி முத்திரை படைத்த நம் கலைவாணருக்குக் கவி அலங்காரம் செய்திருக்கும் நண்பர் ராகவனுக்கு மனமார்ந்த நன்றிகள் //

நன்றி தேவ்

// ஜோ / Joe said...
ஆகா! ஆகா! எங்கள் நாஞ்சில் தந்த நல்முத்து கலைவாணர் புகழ் வாழ்க! //

ஆமாம் ஜோ. அவர் உங்களூர்க்காரர்தான். நாஞ்சில் நாட்டார்தான். :-)

said...

// துளசி கோபால் said...
ராகவன்,

அருமையா சொல்லி இருக்கீங்க.
அப்ப கலைவாணர் பாடுன 'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' பாட்டு
வரிக்கு வரி உண்மையாப்போனதை நினைச்சா, இப்பவும் எங்களுக்கு ஆச்சரியம்தான்.
என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!!! //

உண்மைதான் டீச்சர். மனிதன் மென்மேலும் சொகுசு நாடுவான்னு அப்பவே அவருக்குத் தெரிஞ்சிருக்கு. ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கும் மேலயே இருக்கும். படிச்சிக்கிட்டிருந்தேன். ஊருல எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். அப்போ என்னோட மச்சான் ஒருத்தர் சொன்னாரு. "இந்த பஸ்சுல பாட்டுப் போடுற மாதிரி ரயில்ல பாட்டு வெச்சா எவ்வளவு நல்லாயிருக்கும். போறப்போ பொழுது போக்காயிருக்கும்ல அப்படீன்னாரு" அப்ப என்னோட மாமா "ஆமாம்..இப்ப பாட்டு வேணும்னு கேப்பீங்க...அப்புறம் டீவி வேணும்னு கேப்பீங்க...அப்புறம் வீடியோ கேப்பீங்க. அப்புறம் உங்களுக்குப் பிடிச்ச படமாப் போட்டா நல்லாயிருக்கும்னு கேப்பீங்க"ன்னாரு. இப்ப பஸ்சுல பூரா டிவிடி பஸ்சுன்னுதான நம்மூருல ஓடுது.

// தமிழ்ச் சங்கம். புதுசா இருக்கே? எப்ப ஆரம்பிச்சீங்க?

வாழ்த்து(க்)கள். //

பெத்த பிள்ளையானாலும் தத்த பிள்ளையானாலும் என்ன...பிள்ளை பிள்ளைதானே டீச்சர். இது ஏற்கனவே இளா உருவாக்கியது. பாருங்க...பேர்ல தமிழ் இருக்குறதாலயோ என்னவோ..நம்ம கிட்ட வந்திருச்சு :-)

said...

// Ranganathan. R said...
அன்பு ராகவன்,

மீண்டும் சொல்கிறேன். சுருக்கமான, அவசரமான விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் இந்தமுறையும் கொஞ்சம் விரிவாக.

தங்களின் கவிதை கண்டேன். அருமை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கலைவாணரைப் பற்றிய ஒரு புகழாரத்தை வாசிக்கும் சந்தர்பம் தந்தமைக்கு நன்றி.

யானையைத் தடவிப் பார்க்கும் குருடர்கள் போல, கலைவாணர் என்ற யானையை நாம் தெரிந்தவரைதான் சொல்ல முடியும். அப்படிச் சொன்னாலே அது பிரமிக்க வைக்கும்.

அந்த வகையில் தங்களின் கவிதாஞ்சலி ஒரு சுகானுபவம்.

Thanks Ragavan… !

+ நேசத்துடன்… இரா. அரங்கன் //

உண்மைதான் அரங்கன். கலைவாணர் என்னுடைய தந்தையான் காலத்திற்கும் முந்தைய நடிகர். அப்படியிருக்க...என்னைப் போன்றவர்களுக்கும் அவரைத் தெரிந்திருக்கிறது என்பதே அவரது வீச்சு. ஆனால் இந்த வீச்சு குறையத்தான் செய்யும். ஆனாலும் அதை நாம் முயன்று கூட்டுவதற்குத்தான் இந்த முயற்சிகள்.

நீங்கள் குறிப்பிட்ட திரைத்தேன்கள் அத்தனையும் சிறப்பானவை.

said...

ராகவன் சார்

"உன் கருத்து
உன் பட்டம்
உன் நடிப்பு
திருடித்தான் பலருக்குப் பிழைப்பு"

உண்மையை சொல்லி இருக்கீங்க. அருமை..

said...

அருமையான கவிதை இராகவன்.

கலைவாணரைப் பற்றிப் பாடி கவிதைக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள்.

said...

இராகவன்,
நல்ல கவிதை. கலைவானைரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. இருப்பினும் அவர் பல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தனது திரைப்படங்கள் மூலம் சொல்லியதாக கேள்விப்பட்டேன். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தொண்டு செய்தவர்களை நன்றி உணர்வோடு நினைவு கூறும் இந்த வேளையில் அவர்களின் கனவுகளை நனவாக்க முயல வேண்டும் என்பதே என் கருத்து.

நன்றி.