Apr 13, 2008

தமிழ்க்கடல்!

மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பலசொற்கள்(பெயர்கள்) மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக்கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..


கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை
சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பலசொற்கள் இருக்கின்றன.ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைபப்ற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர்பெற்றது.

மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி ,ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. .பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.

கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.

கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கொள்=எடுத்துக்கொள்ளுதல்) கார்+கோள்=கார்கோள் ஆகி இருக்கலாம்.(இது
சரியா இல்லையா என்பது முழுமையாய் விளங்கவில்லை)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும்
சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமிஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரியநிதியைப்போல இருப்பதால் அதற்கு சலநிதி(சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரிவாரித்தருவதால் வாரி, வாரிதி.

கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப்பெயர் சலதி.
கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும்கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள்தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக்குறிப்பிட பல சொற்கள் இருப்பதுபோலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும்.
நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இருபக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச்சொல்லை ஆங்கிலேயர்கள்கடன் வாங்கி கட்டமாரான் (catamaran)என்கிறார்கள்!

மரத்தைகுடந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.
ஓடுவதுபோல விரைந்து செல்வது ஓடம் .மீன்பிடிக்க பயன்படும்மரக்கலம் திமில்.
பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்
..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம்,

காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப்பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல்.

submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது.

16 ஊக்கங்கள்:

said...

இதில் கூடுதலான சொற்களை சாண்டில்யனின் புத்தகங்களில் வாசித்து அறிந்திருக்கிறேன்.

இப்போது அர்த்தங்களுடன்..

இப்படியான இடுகைகளை வாசிப்பது குறைந்து போகும் தமிழ் அறிவை வளர்க்கும்.

நன்றி ஷைலஜா.

said...

கடல் பற்றிய இவ்வளவு தமிழ் வார்த்தைகளா என ஆச்சர்யப்படுத்தியது :)

முடிந்த அளவு இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதும் முயற்சிக்கவேண்டும்!

said...

//கௌபாய்மது said...
இதில் கூடுதலான சொற்களை சாண்டில்யனின் புத்தகங்களில் வாசித்து அறிந்திருக்கிறேன்.

இப்போது அர்த்தங்களுடன்..

இப்படியான இடுகைகளை வாசிப்பது குறைந்து போகும் தமிழ் அறிவை வளர்க்கும்.//

நீங்கள் சொல்வது சரிதான் மது !

இடுகைகளை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த வார்த்தைகளை பிரயோகிக்கவும் செய்யலாம் :)

said...

என் தமிழை இன்னும் ஏகத்துக்கு இம்ப்ரூவ் பண்ணனும் :(

பதிவு
நல்ல முயற்சி.

said...

அழகான கடற் சொற்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க ஷைலஜா!

கல்கி, டாக்டர் மு.வ, சாண்டில்யன் போன்றோர் இது போன்ற சொற்களை தங்கள் புதினங்களில் பரவலாகப் புழங்குவார்கள்.
Out of sight out of mind அல்லவா? பதிவுகளில் நாமும் அவ்வப்போது இவற்றைப் புழங்கிக்கிட்டே இருந்தா சொற்கள் மறையாமல் ஆவது இருக்கும்!

தமிழுக்குப் புதுச் சொற்களைக் கொண்டு வந்து சேர்ப்பது ஒரு தொண்டு என்றால் பல நல்ல சொற்களை வழக்கு ஒழியாது காப்பதும் ஒரு தொண்டு தான்!

திருச்செந்தூரை வெண்டலைப் புணரி என்பார் நக்கீரர்.

//கார்+கோள்=கார்கோள் ஆகி இருக்கலாம்.(இது
சரியா இல்லையா என்பது முழுமையாய் விளங்கவில்லை)//

நீங்கள் சொல்வது சரி தான்!
கார் முகந்து கொள்வதால் கார்கோள்! ஆழியுட் புக்கு முகந்து கொண்டு ஆர்த்து ஏறி என்று திருப்பாவையும் சொல்லும்!

கப்பல் சொற்களில் வங்கத்தை விட்டு விட்டீர்களே!
வங்கக் கடல் கடைந்த....:-)

said...

கௌபாய்மது said...
இதில் கூடுதலான சொற்களை சாண்டில்யனின் புத்தகங்களில் வாசித்து அறிந்திருக்கிறேன்.

இப்போது அர்த்தங்களுடன்..

இப்படியான இடுகைகளை வாசிப்பது குறைந்து போகும் தமிழ் அறிவை வளர்க்கும்.

நன்றி ஷைலஜா.

>>>>>>>> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌபாய்மது!

said...

ஆயில்யன். said...
கடல் பற்றிய இவ்வளவு தமிழ் வார்த்தைகளா என ஆச்சர்யப்படுத்தியது :)

முடிந்த அளவு இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதும் முயற்சிக்கவேண்டும்>>>


ஆமாம் ஆயில்யன்...வார்த்தைகளை பயன்படுத்த முடியாவிட்டாலும் அறிந்து கொண்டால்கூட போதும், தமிழின் சிறப்பு அலாதியானது என்பதையும்.

said...

மங்களூர் சிவா said...
என் தமிழை இன்னும் ஏகத்துக்கு இம்ப்ரூவ் பண்ணனும் :(

பதிவு
நல்ல முயற்சி.
>>>>>> செந்தமிழும் நாப்பழக்கம் சிவா...படித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும் உங்களுக்கு விரைவில் தமிழ் வசமாகும்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அழகான கடற் சொற்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க ஷைலஜா!>>>>

நன்றி ரவி.

//பதிவுகளில் நாமும் அவ்வப்போது இவற்றைப் புழங்கிக்கிட்டே இருந்தா சொற்கள் மறையாமல் ஆவது இருக்கும்!//

ஆமாம்..புழக்கத்தில் வரச்செய்ய முயலவேண்டும்...இல்லாவிடில் பின்னால்வரும் பரம்பரைக்கு இதெல்லாம் தெரியாமலேபோய்விடலாம்.


//திருச்செந்தூரை வெண்டலைப் புணரி என்பார் நக்கீரர்.//

அப்படியா? தமிழ்க்கடலில் நீங்களும் ஒரு நதி உங்களுக்குத் தெரியாதது இல்லை...இன்னும் நீங்கள் சொல்லகூடும்.

//கப்பல் சொற்களில் வங்கத்தை விட்டு விட்டீர்களே!
வங்கக் கடல் கடைந்த....:-)//
வங்கக்கடல் கடைந்த மாதவனைக்கேசவனை பாடலில் வங்கக்கடலை bay of bengal என நினத்தேன் அது சரியா தவறா ரவி?
நன்றி வருகை+கருத்து இரண்டிற்கும் ரவி!

said...

தொடர்ந்து தமிழ்க்கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்து வாரி வழங்குங்கள். நன்றி.

said...

//வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை பாடலில் வங்கக்கடலை bay of bengal என நினத்தேன் அது சரியா தவறா ரவி?//

ஹிஹி
Bay of Bengal கடைஞ்சவரு, arabian sea-ஐ கடையவில்லையா என்ன? :-)))

வங்கக்+கடல்=வங்கம்+கடல்=வங்கங்கள் (கப்பல்) போகும் கடல்
வாலிதை எடுத்த வளிதரு வங்கம் என்பது மதுரைக்காஞ்சி.
கடல் நீரை முந்நீர் என்பது போல் வங்க நீர் என்றும் சொல்லுவாங்க!

வங்கம் என்பதற்கு அலை என்றும் பொருள் கொண்டு வங்கக் கடலை அலைகடல் என்றும் சொல்லுவார்கள்!

வங்கம் என்பது நெய்தல் நிலச் சொல்லே!

said...

அருமையாய் இருந்தது..தமிழ்க்கடல்..!நிறைய வார்த்தைகளை கற்றுத் தந்தமைக்கு,,பழக்கத்தில் உபயோகிக்க முயற்சிக்கிறேன்..

said...

கடல் என்ற சொல்லின் சொற்பிறப்பைக் காட்டியதற்கு நன்றி அக்கா. அது இடுகுறி என்றே நினைத்திருந்தேன். ஆனால் தமிழில் பெரும்பான்மை காரணப் பெயர்களே என்று இராம.கி. ஐயா முன்பொரு முறை சொல்லியிருந்தது 'கடலின்' சொற்பிறப்பைப் படித்தவுடன் நினைவிற்கு வருகிறது.

முன்பு அறிந்திருந்த பல சொற்களுடன் புதிதாகவும் சில சொற்களைக் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.

said...

***தமிழுக்குப் புதுச் சொற்களைக் கொண்டு வந்து சேர்ப்பது ஒரு தொண்டு என்றால் பல நல்ல சொற்களை வழக்கு ஒழியாது காப்பதும் ஒரு தொண்டு தான்! ***

எண்ணிப் பாரக்க வேண்டிய நல்ல கருத்து.

said...

Greetings from Norway!!!

said...

Beautiful. Please write more related to Tamil Etymology - Srini