Sep 18, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-அறிவிப்பு


முதலில் நன்றி உரை!
இப்படி ஒரு கவிதைப்போட்டியை நடத்துங்க என்று உறசாகப்படுத்திய GG அவர்களுக்கும்,

தலைப்புக்காக இரண்டு நாள் காத்துக்கொண்டிருக்கையில் அநாயசமாக ஒரு நொடியில் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்ற தலைப்பை கொடுத்த "தேனி" கண்ணனுக்கும்,

முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!

கடைசியாக போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கு நன்றி! சங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவ்வளவு நாள் தங்கள் வலைப்பதிவுகளில் கவிதைகளை வெளியிடாமல் நாகரிகம் காத்ததற்கு மேலும் ஒரு நன்றி!

பரிசுகளுடனும், தீர்ப்புடனும் உங்களை மீண்டும் சந்திக்கிறோம். அதுவரை உங்கள் கவிதைகளை பதிவுகளில் இட்டு இந்தப்போட்டியினை மேலும் சிறப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!

தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.

Sep 1, 2006

கவிதை போட்டி-1 : போட்டியில் பங்குபெறும் கவிதைகள்

நண்பர்களே! தமிழ்ச் சங்கம் அறிவித்த முதல் கவிதைப் போட்டியில் பங்கு பெற்று, இம்முயற்சிக்குத் தங்களுடைய ஆதரவை அளித்து சிறப்பித்து உள்ளீர்கள். முதற்கன் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

கவிதைப் போட்டிக்குத் தங்களுடைய படைப்புகளை அனுப்புவதற்கான கால வரையறை நேற்றிரவு(31.08.2006) 11.30 மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை மின்னஞ்சலில் வந்த 34 படைப்புகளும், தமிழ்ச் சங்கத்தில் தனிப் பதிவுகளாக வெளியிடப் பட்டிருக்கின்றன. இம்முப்பத்தி நான்கு கவிதைகளும் "கவிதைப் போட்டி-1"இல் பங்குபெறப் போகும் கவிதைகள் ஆகும். இக்கவிதைகளினின்று 20 கவிதைகளைத் தெரிவு செய்து இறுதி தேர்வுக்காக, கவிஞர் மு.மேத்தா அவர்களிடத்து அனுப்ப உள்ளோம். முதற்கட்ட கவிதை தேர்வை நடத்தும் பொறுப்பை, சங்கம் சாராத இரு வலைப்பதிவர்களிடத்து அளித்துள்ளோம். அவர்களைப் பற்றிய விவரங்கள் பின்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

போட்டியில் பங்குபெறும் கவிதைகளைப் போட்டியாளர்கள் தங்கள் சொந்த வலைப்பதிவுகளில் பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு மதிப்பளித்து வலைப்பதிவர்களும் போட்டியில் பங்குபெறும் தங்கள் கவிதைகளை இது வரை வலையேற்றவில்லை. போட்டியாளர்கள் கடைபிடித்த இந்த கட்டுப்பாட்டுக்கும் எங்களுடைய வணக்கங்கள். இருப்பினும் தன்னுடைய படைப்பைப் பற்றிய கருத்துகளை அடுத்தவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஒரு படைப்பாளிக்குத் கட்டாயம் இருக்கும் என்பதை நாங்களும் உணர்கிறோம். இதுவரை போட்டியாளர்கள், கடைபிடித்த கட்டுப்பாட்டை இன்னும் ஓரிரு நாட்களுக்குத் தொடர வேண்டுமாய் வேண்டுகிறோம். வரும் திங்கட்கிழமைக்குள் முதற்கட்டத் தேர்வுகள் முடிந்துவிடும் என நம்புகிறோம். அது முடிவடைந்ததும், சங்கத்தில் அது குறித்த ஒரு அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் போட்டியாளர்கள் "இன்னும் இருக்கிறது ஆகாயம்" என்னும் தலைப்பில் போட்டிக்கு அனுப்பிய கவிதைகளைத் தங்கள் சொந்த வலைப் பதிவுகளில் வலையேற்றிக் கொள்ளலாம்.

இதுவரை இப்போட்டிக்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பி.கு: போட்டியில், பல்வேறு விதமான உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தும் அருமையான கவிதைகள் பங்கேற்றுள்ளன என இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறோம். அதே சமயம் போட்டியில் பங்குபெறாத மற்ற நண்பர்களும் இக்கவிதைகளைப் படித்து இன்புற வேண்டுகிறோம்.

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 34

மழை
பாதையோர படுக்கையறையில் பச்சிளம் குழந்தையுடன்
குளிரில் குடியிருக்கும் குடும்பம்

சூறாவளி
சுற்றி வீசும் காற்று
சுழண்டு வீழும் உயிர்கள்
சுழற்றியடிக்கும் கட்டிடங்களையும்

சுனாமி
மாண்டவர்களும் மீண்டவர்களும்
மீண்டும் வாழ மறுபடியும் மீண்ட உயிர்கள்

குண்டு வெடிப்பு போரபாயம்
குமுறும் பெருநெருப்பு பூகம்பம்
வீழ்ந்தாலும் வாழ வைக்கும் உயிர் நம்பிக்கை

வாழும் வேட்கையில்

வீம்பாய் தலை தூக்கும் புல் பூண்டு
விழாது அசையும் நாணல்
நிலம் வாரா சாதகப்புள்
நிஜம் இவையே


இன்னும் இன்னும் வல்லது வாழ்வதற்காய்
புத்தம் புது புனர்ஜென்மமேக
இன்னும் இருக்கிறது ஆகாயம்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 33

முன்பும் இருந்தது ஆகாயம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
இனியும் இருக்கும் ஆகாயம்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 32

இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.

பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 31

மீசை அரும்பிய நாளில் அருகியது
மனதில் தணிக்க இயலாத தாகமொன்று

பகலவன் ஈர்ப்பால் பூமி சுற்றுகிறது
கன்னியர் பால் கொண்ட ஈர்ப்பு
தாகம் தணிப்பதாய் மனதை சுற்றி
விட்டுதாகத்துக்கு நீருட்டி தாகம் வளர்த்தது

மேகம் காணாத விளைப் பயிர்
கன்னி தலை சாய்க்காத தோள்
இவை இரண்டும் இருந்துதான் பயனென்ன

பயனில்லா தோளும் அடங்கா தாகமும்
கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் சுழன்ற
சமயத்தில் தான் கண்டேன் கன்னியை

மழை வாசத்தில் தோகை விரித்தாடும்
மயிலின் பரவசம் விவரிக்க வார்த்தையேது
மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட
மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது

பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஒட்டப்
பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே

இதயம் ஓய்வில்லாமல் துடித்து அன்றுவரை
பழுதில்லாமல் இயங்கியதும் அவளைக் காணவே

கண்டேன் அவளை கண்டேன் அவளை
களிப்பில் காலம் உறைந்த சமயமது
அப்பொழுது அறியேன் காலம் உறைந்தால்
அதனை சமப்படுத்த விரைந்து ஓடுமென்று
ஓடியது வாழ்க்கை சக்கரத்தில் சுழற்றி

மனிதனின் கண்களுக்கு தெரியும் நீலவானம்
ஒளிச் சிதறல்களால் ஏற்படும் மாயை
அறிந்தும் உணர்ந்து இருக்கிறான் மனிதன்
இருப்பினும் இன்னும் இருக்கிறது ஆகாயம்
இருக்கும் மனிதன் உள்ளவரை மாயையாய்

அவள் உயிரணு பந்தயத்தில் வெல்ல
உந்து சகதி நானல்ல என்றறிந்தேன்
தாகம் தணிக்காத கானல்நீர் என்றுணர்ந்தேன்
இருந்தாலும் இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 30

கைக்குழந்தையுடன் நாற்சந்தியில் கை ஏந்துபவளுக்கும்
குப்பைமேட்டில் களஞ்சியம் தேடுபவனுக்கும்
இரவின் வெளியில் சுற்றியலையும் சித்தனுக்கும்
சொத்திழந்தவனுக்கும் சுயபுத்தி பிறழ்ந்தவனுக்கும்
வீட்டைத் துறந்தவனுக்கும் துரத்திவிடப் பட்டவனுக்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்

அவர்தம் வீட்டுக் கூரையாக!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 29

ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!

தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!

மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!

இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 28

மழை நின்ற
இரவில்
முறுக்கிய வேலி
கம்பிகளின் முடிச்சுகளில்
துளித்துளியாய் தொங்கியபடி
இன்னும் (மண்ணில்) கரையாமல்
இருக்கிறது ஆகாயம்!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 27

மழை பருகி

நாளான பூமியில்

வேர்வரை காய்ந்து நிற்கும்

மரமொன்றின்

உயிர் துளிர்க்கும்

நம்பிக்கையில்

இன்னும் இருக்கிறது ஆகாயம்!


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 26

தந்த

ஒற்றை முத்த சுவைக்கே

அசந்துப் போனால் எப்படி?

தந்து - பெற

இன்னும் மிச்சமிருக்குது

ஆகாயம்!

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 25

மரங்களைப் பெயர்த்து விட்டு
ஜடமாய் நிற்க வைத்த கட்டிடங்கள்

பூமியை உறிஞ்சி உறிஞ்சி இப்போது
புழுதியை துப்பும் ஓய்ந்து போன பம்புகள்

"விலங்காய்" செய்த விலங்கு வேட்டையில்
வெறும் படமாய் போன படைப்புகள்

பல வாய் விட்ட புகையோடு தன் வாய்
புகை சேர்த்து நோய் சேர்க்கும் வாகனங்கள்

ஒரு "புலன்" வேட்கைக்கு உணவாகி
ஒழிந்து போன உயிரினங்கள்

மனிதா!!!

சொல்லி மாளாது !
மண்ணை கெடுத்தாய்! மண்ணுக்குள்
தண் ணீரை அழித்தாய்!
காற்றை கெடுத்தாய்! நெருப்போடு
காட்டையும் அழித்தாய்!
உலகம் சுருக்கி, உன்னினம் பெருக்கி
ஒவ்வொன்றாய் அழித்தாய்!
எல்லாம் அழித்த பின்....
எங்கே உன் பார்வை.....
எனக்கு புரிகிறது.....
ஐம்பூதத்தில் மீதம் ஒன்று..
ஆஹா !!!
"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...