Feb 6, 2007

"நட்பாராய்தல்" குறள் 791

"இப்பல்லாம் முழு அதிகாரத்துக்கும் பொருள் வேணாமாம்; ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை சொல்லி விளக்கணுமாம்" என்றவாறு மயிலை மன்னாரை அணுகினேன்.

"ப்பூ! இம்புட்டுதானா? இதெல்லாம் நம்மளுக்கு ஜுஜுப்பீ! இப்ப நான் ஸொல்றதை எளுதிக்கோ! கதைக்காவ மண்டைய ஒடச்சு கற்பனை அல்லாம் பண்ண தேவையில்ல. அல்லாம் நம்ம புராணத்துலியே சொல்லியிருக்கு!மகாபாரதத்துல வர்ற கதை இது. எளுதிக்கோ" என்று தெனாவெட்டாகச் சொன்னான் மன்னார்!

இனி வருவது மன்னார் சொல்ல நான் பதிந்தது!


துர்வாசர்னு ஒரு முனிவரு இருந்தாரு.
அவரு ஒருநாளைக்கி திருதராஷ்ட்ரன் அரமணைக்கி வராரு.
அப்போ 'குந்தி'ன்னு ஒரு சின்ன பொண்ணு அவருக்கு பணிவிடை பண்ணினாங்க!
அத்தப் பாத்து முனிவருக்கு ரொம்பா சந்தோசமாயிருது.
'ஒனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரேன். அத்தை யூஸ் பண்ணினேன்னா அதுக்கான தேவதை வந்து. அத்தோட சக்தியை ஒனக்கு கொடுக்கும்'னு சொல்லிட்டு பூட்டாரு.


இந்தப் பொண்ணு சும்மா இருக்கக் கூடாதா?
வெளயாட்டுத்தனமா அந்த மந்திரத்த சொல்லிப் பாக்கலாம்னு செஞ்சுப்புடுது!

ஒடனே சூரிய பகவான் வந்து, 'ஏம் பொண்ணே என்னைக் கூப்பிட்டே! சரி, இந்தா; என் சக்தியை எடுத்துக்கோ'ன்னு சொல்லி ஓரு சூரிய அம்சக் கொளந்தையை, கவசக் குண்டலத்தோட, கொடுத்திட்டு மறைஞ்சிடறாரு.

இந்தப் பொண்ணுக்கா கையும் ஓடலை; காலும் ஓடலை!
இது தெரிஞ்சா ரொம்ப அவமானமாயிடுமேன்னு ஒரு பொட்டியில அத்த வெச்சு தன்னோட ஒரு மாலையையும் போட்டு ஆத்துல வுட்டுட்டாங்க.
அந்தக் கொளந்தைய ஒரு தேரோட்டி பாத்து எடுத்து தன் குளந்தை மாரி வளக்கறாரு.

இந்தக் கொளந்தை, நல்லா வளந்து, வில்லுவித்தைல ஒரு பெரிய ஆளா வராரு.

இத்த சரியாக் கவனிச்ச துரியோதனன், அதாம்ப்பா, ராசாவோட புள்ள, ஒரு சரியான சமயத்துல தன்னோட ராச்சியத்துல ஒரு ஊரைக் கொடுத்து அவனையும் ஒரு ராசாவாக்கி, 'நீதாண்டா என்னோட நண்பன்'னு சொல்லிடறான்!
அல்லாரும் நம்மை கொறைச்சலா பேசினப்போ, இவன் நண்பன்னு சொல்லிட்டானேன்னு, கொஞ்சம் கூட யோசிக்காம இவரும் அவன் கால்லுல வுளுந்திடறாரு.

அவ்ளோதான்!
இந்தாளு அதுக்காவ இன்னால்லாம் பண்றாரு தெரியுமா?
அவன் கெட்டவன்னு தெரிஞ்சாலும், அவனை வுட்டு பிரியாம கூடவே இருக்காரு.
ஒரு நேரத்துல தன்னோட தாயே வந்து 'நீதாண்டா என் புள்ள!'ன்னு கதற்ராங்க.
அப்பக் கூட அசையலியே!
'சர்த்தான் போம்மா! போயி, ஒன் புள்ள அர்ச்சுனனை ஒயுங்கா உசிரைக் காப்பாத்திக்கச் சொல்லு! ஏன்னா, என் நண்பனுக்காவ நான் அவன் தலைய வாங்கக் கூட தயங்க மாட்டேன்'னு கண்டிசனா சொல்லிடறாரு.
கடைசீல அந்த அர்ச்சுனன் கையிலியே உசிரையும் வுடறாரு.

இவரை நெனைச்சுதான் நம்ம ஐயன் இந்தக் குறளையே எளுதினாரோன்னு கூட எனக்கு டவுட்டு உண்டு!
அது இன்னான்னு கேக்குறியா!

இதான் அது1
'நட்பாராய்தல்' அப்பிடீங்கற அதிகாரத்துல மொதக் குறளா வெச்சிருக்காரு!
791ஆவது குறள் இது!
கேட்டுக்கோ!

"நட்பாராய்தல்"

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. [791]

இப்ப, நீ ஒருத்தராண்ட தோஸ்தாவறதுக்கு முன்னாடியே, இவன் யாரு, இந்த ஆளோட நட்பு வெச்சுக்கறது நமக்குத் தேவைதானான்னு யோசிச்சு முடிவு பண்ணணும். ஏன்னா, அப்படி ஆயிட்டேன்னு வெச்சுக்கோ; அதுக்கு அப்பால, நீ இன்னா பண்ணினாலும் ஒன்னால உடவே முடியாது.கால சுத்தின பாம்பு மாதிரி அது சுத்திக்கினே இருக்கும். ஒன்னியக் காவு வாங்காம வுடாது.

'சரி, சரி, வா! நா ஒங்கிட்ட அப்பிடி ஒண்ணும் கேக்க மாட்டேன்! நம்ம நாயராண்டை ஒரு டீ, வடை சாப்ட்டுட்டு போயி ஒன் பதிவ எளுது' எனச் சிரித்தபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!


Jan 25, 2007

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


'எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதலானதாயிருப்பதுபோல உலகுக்கு இறைவன் முதல்வனாக இருக்கிறான்.'

மனிதக் குரங்குகள் குரங்கு மனிதர்களாய் வாழ்ந்த காலமது.

மலைஅடிவாரத்தில், குகைகளுக்குள், மிருகத்தோலாடைகளுடன் வாழ்ந்துவந்தனர் அவர்கள். சைகையும் ஒலிகளும் நிறைந்த மொழி ஒன்றைப் பேசினர். இயற்கைக்கு அஞ்சி நடுங்கினர். குழுவாக வேட்டையாடி கிடைப்பதை ஒன்றாய் பகிர்ந்தனர்.

வயதானப் பெண் ஒருத்தி ஒருநாள் இந்தக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்தாள். நெடுந்தூரம் நடந்தாள். மலையின் உச்சியை அடைந்து இயற்கையை கவனிக்கத் துவங்கினாள்.
வானின் நட்சத்திரங்களைக் கணக்கெடுத்தாள். பூமியின் சுழற்சியை கண்டுகொண்டாள். செடிகொடி வளர்ப்பதை தெரிந்துகொண்டாள். தீயை உருவாக்கி கட்டுக்குள் வைத்திருக்கப் பழகினாள். கோள்களின் பாதையைப் புரிந்துகொண்டாள். காட்டில் விளைபவைகளில் விஷத்தையும் உணவையும் பிரித்தறியும் அபூர்வ உணர்வு அவளுக்கிருந்தது. பல ஆண்டுகள் கழித்து இயற்கைபற்றிய பயம் நீங்கியவளாய் மலையிலிருந்து கீழிறங்கினாள்.

தொலைந்துபோனவள் திரும்ப வருவதை வேடிக்கையாய் பார்த்தனர் கீழிருந்தவர்கள். அவளிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. அவள் முகம் ஒளியில் மிதப்பதைப் போலொரு பிரம்மை மேற்கொண்டது.

மக்களைப் பார்த்ததும் கைகால்களை அசைத்து ஒருவகை நாட்டியமாடினாள் இவள். இதுவரை அவர்கள் அறிந்திராதது அந்த நாட்டியம்.

"உண்மைகளை அறிந்துகொண்டேன்" என்றாள்.

"சொல்" என்றனர், சிலர் ஏளனத்துடனே.

"சொல்லொண்ணா பேரின்பம்." என்றாள்.

"பைத்தியக்காரி." என்றனர்.

"ஆமாம். அசாதாரணச் சிந்தனை கொண்டவர்கள் பைத்தியங்கள்தான்." என்றாள்.

"அவளை விடுங்கள்." பெரியவர் ஒருவர் முன்வந்தார்."உனக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. சொல் அதை எங்களுக்கும்."

"இயற்கை." என்றாள்

"விளக்கு." என்றார்.

அவளுக்குப் புரிந்ததைச் சொன்னாள். புரியாமல் விழித்தனர் மக்கள்.

"புரியச்செய்". என்றனர்.

கதைகளாகச் சொன்னாள் அவள் கண்டவைகளை.

"எப்படி நம்புவோம் உன்னை?" என்றனர்.

"நாளை பகலில் இரவு தோன்றும் பாருங்கள்." என்றாள்.

கேலி செய்தனர் அவளை. கல்லால் எறிந்து கொல்வோம் என்றனர். நாளைவரை பொறுத்திருக்கச் சொன்னார் பெரியவர்.

அந்த சூரியக் கிரகண நாளுக்குப்பின் உலகின் முதல் மதம் தோன்றியது.

Jan 13, 2007

வலைப்பூக்களால் திருக்குறளுக்கு ஒரு தமிழ் மாலை



தமிழுக்காகவே பிறந்த இந்த வலைப்பூவில், இன்னுமொரு மைல்கல் நடவிருக்கிறோம். அது திருக்குறளுக்கான விளக்கம்.


சாமான்ய மனிதர்களால், சாமான்ய எழுத்துக்களால் குட்டிக்குட்டி கதைகள் மூலம் ஒவ்வொரு திருக்குறளுக்கும், மக்கள் ரசிக்கும்படியாக தருவதே எங்கள் நோக்கம். தமிழ்ச்சங்கம் மூலம் பொங்கல் திருநாளிலிருந்து திருக்குறள் உலகை வலம் வர இருக்கிறது. எங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவை பெரும் அளவில் தருமாறு (வேறு எப்படி பின்னூட்டங்கள் மூலம் தான்) கேட்டுக்கொள்கிறோம்.

Dec 19, 2006

அவ்வையும் அப்துலும்

கோவை வந்து உலகத்தமிழ் இலக்கியக் கருத்தரங்கை துவக்கிவைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது உரையில் ஔவையின் கீழ்கண்ட பாடலை மேற்கோளிட்டிருக்கிறார்.

அரிது அரிது மனிடராதல் அரிது
அதனினும் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும்தான் செய்த காலையில்
வானகம் திறந்து வழிவிடுமே!

மேலும் பாரதியின் அறிவியல், மெய்யியல் பாடல் வரிகள் கீழ்கண்டவாறு.

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில் புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?

மேலும் அவர், "தமிழ் ஒரு பிரதேச மொழி மட்டுமில்லை; மனித சமுதாயத்தை சிறப்புடன் மகிழ வைக்கும் அறிவுக் களஞ்சியம்" என்றிருக்கிறார்.

நன்றி: தினமலர்

Nov 28, 2006

கலைவாணரே உமைத்தானே

வாணரே கலைவாணரே
திரையுலகில்
உம்மையன்றி பலர் வீணரே
அவர்கள்
நகைச்சுவை என வருகையில்
வெறும் உடற் கோணரே


உன் கருத்து
உன் பட்டம்
உன் நடிப்பு
திருடித்தான் பலருக்குப் பிழைப்பு
அதனால் வியப்பதும் நிலைப்பதும்
உனது அன்றைய உழைப்பு


காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
வெற்றித் திருமகன் நீ
இது உனக்குத்தான் பொருத்தம்
வேறு யாருக்குச் சொன்னாலும்
ஏங்கேயோ உறுத்தும்


கிந்தனாரும் நல்லதம்பியும்
உலகத்திலே பயங்கரமான ஆயுதமும்
கண்ணே உன்னால் நானடையும் கவலையும்
மறவாத வகையறாவாக
பாட வேண்டும் தொகையறா


நவம்பர் 30ல் நீ பிறந்தாய்
ஐம்பதாம் ஆண்டில் மறைந்தாய்
ஆனாலும் தமிழர் மனிதில்
குறையாது நிறைந்தாய்
சமூகக் கருத்தும் நகைச்சுவையும்
ஒன்றாக்கி அதிலே உறைந்தாய்!


உனது புகழ்
இன்னும் வளரத் தேவையில்லை
செடிதானே மரமாக வேண்டும்
நீ மரம்!
நீட்டோலை வாசியா நின்ற நல்ல மரமல்ல
மலர்ந்து கனியும் காட்டகத்து மரம்!


அன்புடன்,
கோ.இராகவன்

Nov 9, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்-முடிவுகள்


இந்தத் தலைப்புக்கு வந்த கவிதைகள் பல. அதில் சிலர் பதிவுகள்(பிலாகர்) அல்லாதவர்கள். அவை கொடுத்த உற்சாகம் தான் எங்களுக்கு பெரிய ஊட்டமே. இருப்பினும் முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று கணினிமயமாக்கல் இல்லாததுதான்.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பளித்த அனைவருக்கு நன்றி! நன்றி! நன்றி!
இப்படி ஒரு போட்டியை நடத்த எங்களுக்கு அறிவுரை வழங்கிய தடாலடியாருக்கும், ஊக்கமும் முடிவுகளில் உதவிய தேனி கண்ணனுக்கும் நன்றி!
முதல் கட்ட தீர்ப்புகளை வழங்கிய "இன்ஜினியர்" பாலபாரதிக்கும்(ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு விமர்சனம் தந்தவருக்கு சங்கம் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது. நாளை அந்த விமர்சனங்களை ஒரு பதிவாகவே வெளியிடுகிறோம்), முத்துக்கள் மாதிரி ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு மதிப்பெண் அளித்து தரம் பிரித்து தந்த "நிலவு நண்பன்" ரசிகவ் ஞானி, அவர்களுக்கும் நன்றி! நன்றி!



தாமாகவே முன் வந்து எங்களுக்கு உதவிய முத்தமிழாருக்கும்(மஞ்சூர் ராஜா) ராசுக்குட்டிக்கும் எங்கள் நன்றிகள் பல.


வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிட சங்கம் தனி மடலை எதிர்பார்ர்க்கிறது- தனி மடல் முகவரி sirippu.sangam@gmail.com

இதோ முடிவுகள்


ஆறுதல்: கவிதை- 21
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


மூன்றாவது இடம்: கவிதை - 23
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


இரண்டாவது இடம்: கவிதை - 05
கவிதையைப் படிக்க சொடுக்கவும்


முதல் இடம்: கவிதை - 03
கவிதையைப் படிக்க சொடுக்கவும்

Oct 27, 2006

புதுசு கண்ணா புதுசு!

காக்க வைத்தலும்,
காத்து இருப்பதும் சுகம்தான்.

புரிந்துகொள்பவர்களுக்கும் முடியாதவர்களுக்கும் இந்தப்பதிவு சமர்ப்பணம்.