மீண்டும் ஒரு முறை
சீவி சிங்காரித்து
பொன்னகையும் புன்னகையுமாய்
ஒரு பெண் பார்க்கும் படலம்
மீண்டும் ஒரு முறை
போலியாய் புன்னகைத்து
ஊருக்கு போய் கடுதாசி போடுறோம்
எனும் "மா"ப்பிள்ளை வீட்டுக்காரர்கள்
எனைப் போலவெ
தேய்ந்தும் வளர்ந்தும்
காத்திருக்கிறாயோ நிலவு பெண்ணே
ஆனால் உனக்காவது
இன்னும் இருக்கிறது ஆகாயம்
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
Aug 31, 2006
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 24
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, August 31, 2006 0 ஊக்கங்கள்
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 23
குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, August 31, 2006 1 ஊக்கங்கள்
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 22
மண்ணுலக மாந்தர் வகைவகையாய் மாசுகளை
அன்றாடம் அன்பாய் வளர்க்கின்றார்- மன்தகையின்
இத்தகைய கோலங்கள் எண்ணற்ற வேதனைக்கே
வித்தூன்றும் என்றே விளம்பு.
புகைமாசு இங்கே புவியை விழுங்கும்
பகைமாசு! ஐயகோ! பாவம்- குகைக்குள்ளே
மாட்டிய மானாகத் தானே தவிக்கின்றார்!
ஈட்டிமுனைச் சாவென்றே சொல்.
ஒலிமாசு காதுகளில் உட்புகுந்து சென்று
உளிபோல குத்திக் குடையும்- வழியெல்லாம்
நாடிநரம்புகளை தூண்டி துடிக்க வைத்து
ஓடவைக்கும் என்றே உணர்.
குளிர்சா தனப்பெட்டி குப்பைகள் கூளம்
தெளிக்கின்ற மாசுகளோ தேங்கி-அழிக்கின்ற
ஓலத்தை நாமோ உணராமல் வாழ்கின்றோம்!
காலந்தான் கண்ணருகில் காண்.
இப்படித்தான் எண்ணற்ற மாசுகளோ விண்ணகத்தை
பற்றித்தான் ஒசோன் படலத்தை- வெற்றிடமாய்
மாற்றினாலும் இன்னும் இருக்கிறது ஆகாயம்!
வாட்டுகின்ற மாசகற்றி வாழ்!
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, August 31, 2006 0 ஊக்கங்கள்
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 21
அண்ணி உங்க
தங்க அட்டிகையை
வரவழியிலே தொலச்சுட்டேன்
கண்ணைக் கசக்கிய நாத்தியிடம்
போனால் போகிறது
நீ பத்திரமாக வந்தாயே என்றேன்
புழக்கடையில்
துணி துவைக்கையில்
சமையலறையில்
மாமியாரின் குரல்
அவர் மகனிடம்
ஒரு ஆர்ப்பாட்டம், கூச்சல்
எதுவுமில்லை
பித்தளைக்கு மெருகு
போட்டு அவங்க வீட்டில
கொடுத்துட்டாங்களோ
தலை மேலே
பறந்த குருவிகளை
அண்ணாந்து பார்த்தேன்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
செதுக்கியவர் ILA (a) இளா at Thursday, August 31, 2006 0 ஊக்கங்கள்
Aug 30, 2006
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 20
விண்ணிருந்து நட்சத்திரமொன்று உதிர்ந்த கணத்தில்
கண் மூடி நானுன்னை யாசித்தேன்
மேகமிடித்து மழை பொழிந்த தினத்தில்
மின்னல் வெட்ட, உன்னை நான் சந்தித்தேன்
மெரீனா... ஒண்ணு வாங்குங்க"
என் வாழ்வின் பௌர்ணமி அன்றுதான்
கடலலை கால் தொட கதையளக்கையில்
என் வானெங்கும் நீந்திக் கொண்டிருந்தன
அன்னப் பட்சிகள்
"என்னைப் பிடிச்சிருக்கா" நீ கேட்ட விநாடி
வானவில்லொன்று வெடித்துச் சிதறி
விண்ணெங்கும் ரங்கோலி!
தயங்கியவாறே நானுன்னை தீண்ட
முத்தமிட்டுக் கொண்டிருந்தன
வானும் கடலும், தூரத்தில்
"அருந்ததி தெரியறதா பாருங்கோ"
உன் விரலழுத்தி சிரித்தேன், சிரித்தோம்
இன்னும் இருக்கிறது ஆகாயம்
நமக்கான தேனிலவை சுமந்துகொண்டு!
#போட்டியாளர் சார்பில் பதிவிட்டது : நாமக்கல் சிபி
செதுக்கியவர் நாமக்கல் சிபி at Wednesday, August 30, 2006 1 ஊக்கங்கள்
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 19
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
இவை யாவும் பார்த்துக் கொண்டு
இன்னும்தான் இருக்கிறது ஆகாயம்!
சொந்த நாட்டில் சொந்த ஊரில்
சொந்த மொழியில் பேச நாணியே
நுனி நாக்கு மொழி பேசிடும்
உலுத்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தமிழ் மறையாம் திருக்குறளை
தினம் ஒரு பத்து சொல்லி
"ஆடவா" எனும் அழைப்பினைப்
பார்த்தும் பாராதது போல் செல்லும்
நிலை கெட்ட மாந்தரைப் பார்த்துக்கொண்டு
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தன் நடுவே "தான்" பெற்ற
தனதொரு குழந்தையினை [ப்ளூட்டோ]
இல்லையென்று தள்ளிவிட்டு
எள்ளி நகையாடும் அறிவிலிகளைக்
கண்டிங்கு சிரித்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
யார் குடியை யார் கெடுக்க
ஏது நல்ல நேரமென்று
எண்ணங்களைக் கசக்கிப் பிழிந்து
இன்சொற்கள் நிரப்பி இட்டுவரும்
"பூக்களைப்" பார்த்து நொந்தபடி
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
#போட்டியாளர் சார்பில் பதிவிட்டவர் : நாமக்கல் சிபி
செதுக்கியவர் நாமக்கல் சிபி at Wednesday, August 30, 2006 0 ஊக்கங்கள்
சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 18
விதை விதைத்து, களை புடுங்கி, உரமிட்டு, ஆடவரும் பெண்டிரும்
ஒன்றாய் உழைத்த பின்னும் - அமோக விளைச்சலின்போது
" மானம் தப்பாது மும்மாரி பொழிஞ்சு காப்பத்திட்டியே சாமி!"
-என்று வானத்தை நோக்கி கைக்கூப்பிய ஏழை குடியனவனின்
ஆனந்த கண்ணீரில் வானத்தின் பிம்பம் கண்டு உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"
கதிரவனையே மறைக்கும் வானளாவிய கட்டிடங்களை கண்ட போதும்,
காற்றையே கிழித்துச் செல்லும் வானவூர்தியை கண்ட போதும்,
எண்ணற்ற அறிவியலின் சாகசங்களை கண்ட போதும் - ஏற்படாத மகிழ்ச்சி,
வர்ண ஜாலங்களின் தலைவி வானவில் -லை தொடும் தூரத்தில் கண்டு,
குதூகலமாய் கைக்கொட்டி சிரித்த குழந்தையின் புன்சிரிப்பில் மெய்சிலிர்த்து உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"
முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, உறவு அறியாது
குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த உயிரை காப்பாற்ற தன் இரத்தத்தை
தந்த என் நண்பனின் கரம்பிடித்து - "வானமும் வையகமும் உள்ளவரை , நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் தம்பி"
என்று நாதழுத்த அன்னையின் பாசத்தையே மிஞ்சிய மனிதநேயத்தை கண்டு உறைந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"
"வெள்ளையும் கருப்புமாகிய நிரந்தர நிறத்தை விடுத்து, வானமே - நீ நீலமானதேனோ?" - என்று நான் வினவ,
"ஆலகால விஷத்தையுண்டு உலகை காத்த சிவன் நீல்கண்டனானது போல
நாலுகாலமும் உயிரின் மேன்மைக்காக பாடுபடுமுன் முயற்ச்சியும்,நம்பிக்கையும் கண்டு
உவகையில் பூத்த உள்ளக்களிப்பே இந்த நீலம்" -என்று நீ கூற, திக்குமுக்காடி பிதற்றினேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!!!"
#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...
செதுக்கியவர் ILA (a) இளா at Wednesday, August 30, 2006 0 ஊக்கங்கள்