Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 25

மரங்களைப் பெயர்த்து விட்டு
ஜடமாய் நிற்க வைத்த கட்டிடங்கள்

பூமியை உறிஞ்சி உறிஞ்சி இப்போது
புழுதியை துப்பும் ஓய்ந்து போன பம்புகள்

"விலங்காய்" செய்த விலங்கு வேட்டையில்
வெறும் படமாய் போன படைப்புகள்

பல வாய் விட்ட புகையோடு தன் வாய்
புகை சேர்த்து நோய் சேர்க்கும் வாகனங்கள்

ஒரு "புலன்" வேட்கைக்கு உணவாகி
ஒழிந்து போன உயிரினங்கள்

மனிதா!!!

சொல்லி மாளாது !
மண்ணை கெடுத்தாய்! மண்ணுக்குள்
தண் ணீரை அழித்தாய்!
காற்றை கெடுத்தாய்! நெருப்போடு
காட்டையும் அழித்தாய்!
உலகம் சுருக்கி, உன்னினம் பெருக்கி
ஒவ்வொன்றாய் அழித்தாய்!
எல்லாம் அழித்த பின்....
எங்கே உன் பார்வை.....
எனக்கு புரிகிறது.....
ஐம்பூதத்தில் மீதம் ஒன்று..
ஆஹா !!!
"இன்னும் இருக்கிறது ஆகாயம்"

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

1 ஊக்கங்கள்:

said...

ஆகாயத்தை எங்கேவிட்டார்கள்
அங்கேயும் தோண்டிவிட்டார்கள்
ஓசோன் மண்டலத்தில் பெரிதாய்
ஓட்டை ஒன்றைப் போட்டதாரய்யா
இனிக்கப்பேசி நமமை வளைக்கும்
இந்த மனிதர்கள் தானய்யா!
-SP.VR.SUBBIAH