Sep 1, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 32

இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்.

அடி மேல் அடி வைத்து நடை நான் பழக,
தவறிய அடிகளுக்கு வலி நீ சுமந்தாய்.

பாடம் கேட்க பள்ளி நான் செல்ல,
இங்கு உழைத்து கரைந்தாய் நீ மெழுகாய்.
காலஓட்டத்தில் காதலுற்று நான் தவிக்க,
கசிந்துருகி மேன்வழி நீ காட்டினாய்.

தாயாகி நீ செய்தவைக்கு நான் என் செய்ய?
என்று நான் வினவ,
நீ புன்னகையுடன் பட்டியலிட்டாய்
எனக்கு செய்ய முடியாதவைகள் எவை என்று.

உன் அன்பில் நான் திகைக்க,
பதில் கிடைத்தது என் வினாவிற்கு.

அழியா ஆகாயம் போல்,
அழியா அன்பை வாரித் தெளித்த நீ சொன்னாய்,
"அடிக் கண்மணி உன் பார்வையின் எல்லைக்கும் அப்பால்,
பரந்து விரிந்து இன்னும் இருக்கிறது ஆகாயம்"

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

1 ஊக்கங்கள்:

said...

// இடியைத் தோற்கடிக்கும் வலியைக் கொடுத்து,
நிலத்தில் வீழ்ந்த என் பிஞ்சு விரல்களின் ஈரம் தொட்டு,
உன் வலிகளைத் துடைத்துக் கொண்டாய்//

ரொம்ப நல்லா இருக்குங்க இந்த வரிகள். பிரசவ வலியை இடி உடன் ஒப்பிட்டு உள்ளீர்கள். நன்று.

வெற்றி அடைய வாழ்த்துக்கள்