Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 16

தனிமையைத் தவிர
தைரியம் வளர்க்கும் சாதனமில்லை
தனித்திரு...

அதிகப் பசியோடு உண்ண ஆரம்பி
குறைவான பசியோடு உண்டு முடி
பசித்திரு...

கனவுகளில்கூட
கதிரவனை வெல்லு
விழித்திரு...

களத்தை தேர்ந்தெடுத்து
கத்தியை கூர்படுத்து
களத்தில் கத்தியையும் புத்தியையும்
கலந்து பயன்படுத்து

பாலைவனத்தில்
தாவரமாயிருந்தாலும்
காற்றின் ஈரப்பதம் பருகு

சுறுசுறுப்பில் தேனீயாயிரு
நிதானத்தில் ஞானியாயிரு

வம்புகளைக் கண்டி
வெம்புவதை விடு
கச்சைகளின் மேலுள்ள
இச்சைகளை சுடு

நிலவை குனிந்து பார்
நிழலை நிமிர்ந்து பார்
வாழ்வை வார்த்துப் பழகு

செவிகளைச் செலவழி
வார்த்தைகளுக்கு வாய்ப்பளி
வரங்களுக்கு வாய்திற

உலகம் அண்ணாந்து பார்க்கும் வண்ணம்
உயரக் கொண்டுவிடு எண்ணம்
எப்போதும் நினைவு தப்பாதிரு

வாய்ப்பை வசப்படுத்து
வெற்றியை வசியப்படுத்து

கர்வம் தலைக்கேறினால்
அண்ணாந்து பார் அமைதியாய்
இன்னும் இருக்கிறது ஆகாயம்...

#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

2 ஊக்கங்கள்:

ராசுக்குட்டி said...

பிரமாதமான கவிதை! வைர வரிகள்!

ALIF AHAMED said...

கவிதை அருமை

வெற்றிபெற வாழ்த்துக்கள்.