Aug 30, 2006

சங்கம்- கவிதைப் போட்டி(1)-கவிதை- 18

விதை விதைத்து, களை புடுங்கி, உரமிட்டு, ஆடவரும் பெண்டிரும்
ஒன்றாய் உழைத்த பின்னும் - அமோக விளைச்சலின்போது
" மானம் தப்பாது மும்மாரி பொழிஞ்சு காப்பத்திட்டியே சாமி!"
-என்று வானத்தை நோக்கி கைக்கூப்பிய ஏழை குடியனவனின்
ஆனந்த கண்ணீரில் வானத்தின் பிம்பம் கண்டு உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

கதிரவனையே மறைக்கும் வானளாவிய கட்டிடங்களை கண்ட போதும்,
காற்றையே கிழித்துச் செல்லும் வானவூர்தியை கண்ட போதும்,
எண்ணற்ற அறிவியலின் சாகசங்களை கண்ட போதும் - ஏற்படாத மகிழ்ச்சி,
வர்ண ஜாலங்களின் தலைவி வானவில் -லை தொடும் தூரத்தில் கண்டு,
குதூகலமாய் கைக்கொட்டி சிரித்த குழந்தையின் புன்சிரிப்பில் மெய்சிலிர்த்து உணர்ந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

முகம் தெரியாது, பெயர் தெரியாது, ஊர் தெரியாது, உறவு அறியாது
குற்றுயிரும் குலையுயிருமாய் இருந்த உயிரை காப்பாற்ற தன் இரத்தத்தை
தந்த என் நண்பனின் கரம்பிடித்து - "வானமும் வையகமும் உள்ளவரை , நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கனும் தம்பி"
என்று நாதழுத்த அன்னையின் பாசத்தையே மிஞ்சிய மனிதநேயத்தை கண்டு உறைந்தேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!"

"வெள்ளையும் கருப்புமாகிய நிரந்தர நிறத்தை விடுத்து, வானமே - நீ நீலமானதேனோ?" - என்று நான் வினவ,
"ஆலகால விஷத்தையுண்டு உலகை காத்த சிவன் நீல்கண்டனானது போல
நாலுகாலமும் உயிரின் மேன்மைக்காக பாடுபடுமுன் முயற்ச்சியும்,நம்பிக்கையும் கண்டு
உவகையில் பூத்த உள்ளக்களிப்பே இந்த நீலம்" -என்று நீ கூற, திக்குமுக்காடி பிதற்றினேன் -
"இன்னும் இருக்கிறது ஆகாயம்!!!"


#போட்டியாளர் சார்பாக பதிவிட்டது இளா...

0 ஊக்கங்கள்: